சென்னை கொண்டித்தோப்பு, சரவணமுதலி தெருவை சேர்ந்தவர் அருண். இவர், பாரிமுனையில் உள்ள தனியார் நிறுவனத்தில் கூலி வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி ஜெயஸ்ரீ. இவர்களுடைய 1½ வயது மகள் பூமி. இவர்கள், 3–வது மாடியில் வசித்து வருகின்றனர்.
நேற்று முன்தினம் மாலை ஜெயஸ்ரீ, தனது குழந்தை பூமிக்கு வீட்டின் மொட்டை மாடியில் நின்று சாப்பாடு கொடுத்துக்கொண்டு இருந்தார். குழந்தை சாப்பாடு உண்ண மறுத்து அடம்பிடித்தது.
அப்போது தாயின் கையில் இருந்த குழந்தை பூமி, திடீரென 3–வது மாடியில் இருந்து கீழே தவறி விழுந்துவிட்டது. இதில் தலையில் பலத்த காயம் அடைந்த குழந்தை ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடியது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஜெயஸ்ரீ, கூச்சலிட்டார்.
சத்தம்கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் குழந்தை பூமியை மீட்டு ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி குழந்தை பூமி, பரிதாபமாக இறந்தது. இதுகுறித்து ஏழுகிணறு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
தாயின் கண் முன்பே 3–வது மாடியில் இருந்து தவறி விழுந்து 1½ வயது குழந்தை பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.