ஒடிசா மாநிலம், கொனார்க்கில் தேசிய சுற்றுலா மாநாடு கடந்த 2 நாட்களாக நடந்தது. இந்த மாநாட்டின் முடிவில் மத்திய சுற்றுலா துறை மந்திரி பிரகலாத் சிங் படேல் பங்கேற்று பேசினார். அப்போது அவர் சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் கவர்ச்சி திட்டம் ஒன்றை வெளியிட்டார்.
ஒரே வருடத்தில் 15 இடங்களுக்கு சுற்றுலா செல்கிறவர்களது பயண செலவுகளுக்கான நிதியை சுற்றுலா அமைச்சகம் அளிக்கும் வெகுமதி திட்டம் ஒன்றை செயல்படுத்தப்போகிறோம். இதன்படி, அவர்கள் 15 இடங்களுக்கு சுற்றுலா சென்று, அது தொடர்பான படங்களை எங்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
அது மட்டுமின்றி, அவர்கள் தங்கள் சொந்த மாநிலத்தில் இல்லாமல் அங்கிருந்து வெளியே வந்து பிற மாநிலங்களில் சுற்றுலா சென்றிருக்க வேண்டும்.இப்படி சுற்றுலா செல்கிறவர்களை இந்திய சுற்றுலா துறையின் விளம்பர தூதர்களாக கவுரவிக்க வேண்டும்.இங்கு கொனார்க்கில் உள்ள சூரிய பகவான் கோவில், தனித்துவமான தலங்கள் பட்டியலில் சேர்க்கப்படும்.இதற்கான சிறப்பு நிகழ்ச்சி, விரைவில் நடைபெறும் என்று அவர் கூறினார்.
சுற்றுலா துறை கூடுதல் தலைமை இயக்குனர் ரூபிந்தர் பிரார் பேசும்போது, ‘‘சுற்றுலா வழிகாட்டிகளாக விரும்புகிறவர்களுக்கு சுற்றுலா அமைச்சகம் சான்றிதழ் பயிற்சி அளித்து வருகிறது’’ என தெரிவித்தார்.