நடிகர் ரஜினிகாந்த் இன்று தனது 70-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். பிறந்த நாளான இன்று கோயிலில் சிறப்பு பூஜைகள் செய்தும், நலத்திட்ட உதவிகள் வழங்கியும் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அதேபோல் சமூக வலைதளங்களில் அரசியல்வாதிகளும், சினிமா பிரபலங்களும் தங்களது வாழ்த்துக்களை ரஜினிக்கு தெரிவித்து வருகின்றனர்.
மு.க ஸ்டாலின் டுவிட்டரில் வெளியிட்டுள்ள வாழ்த்துச்செய்தியில், “எழுபதாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் இனிய நண்பர் ரஜினிக்கு இதயமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள். ரஜினி நல்ல உடல் – மனநலத்துடனும், வளத்துடனும், மிக நீண்ட வாழ்க்கை வாழ வாழ்த்துகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
அதேபோல், நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் வெளியிட்டுள்ள பிறந்த நாள் வாழ்த்துச் செய்தியில், “அன்பர் நண்பர் திரு.ரஜினிகாந்துக்கு நல் ஆரோக்கியமும், வெற்றியும் பல்லாண்டு தொடர இந்நாளில் வாழ்த்துகிறேன். உங்கள் நான்” என்று பதிவிட்டுள்ளார்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பிறந்தநாளையொட்டி டிவிட்டரில் ரஜினி ஹேஷ்டேக்குகள் ட்ரெண்டாகி வருகின்றன. ரஜினி பிறந்த நாளுக்காக அதற்காக உருவாக்கப்பட்ட #HBDThalaivarSuperstarRAJINI என்ற ஹேஷ்டேக் உலக அளவில் ட்ரெண்டாக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் லட்சக்கணக்கானோர் தங்களது வாழ்த்துக்களையும், பிறந்த நாள் கொண்டாட்டங்களையும் பகிர்ந்துள்ளனர். அது போல்
#HappyBirthdaySuperstar(21.8K Tweets)#HBDThalaivarSuperstarRAJINI(301K Tweets)#HBDSuperstarRajinikanth(89.8K Tweets)#HappyBirthdayRajinikanth(43.1K Tweets)ஹேஷ்டேக்குகளும் ட்ரெண்டாக்கப்பட்டு வருகிறது.
ரஜினிகாந்த் பிறந்த நாளை முன்னிட்டு சென்னையை அடுத்த மணப்பாக்கத்தில் குறைந்த விலையில் சாப்பாடு வழங்கும் உழைப்பாளி உணவகம் திறக்கப்பட்டுள்ளது. ரஜினியின் ரசிகரும் சித்த மருத்துவருமான வீரபாபு இந்த உணவகத்தை தொடங்கியுள்ளார். உணவகத்தை சித்தாள் வேலை செய்யும் பெண் ஒருவர் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். இங்கு அளவு சாப்பாடு10 ரூபாய்க்கும் அளவில்லா சாப்பாடு 30 ரூபாக்கும் வழங்கப்படுகிறது.
பிறந்தநாளை முன்னிட்டு ரஜினி மக்கள் மன்றத்தின் தென்சென்னை (கிழக்கு) மாவட்ட தலைவர் சினோரா பி.எஸ்.அசோக் தலைமையில் சென்னை பட்டினப்பாக்கத்தில் நேற்று ரஜினிகாந்த் பிறந்தநாளையொட்டி நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.