Home செய்திகள் பொதுத்துறை வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் ரூ.15 ஆயிரம் கோடி பணப்பரிமாற்றம் முடங்கியது

பொதுத்துறை வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் ரூ.15 ஆயிரம் கோடி பணப்பரிமாற்றம் முடங்கியது

144
0

பொதுத்துறை வங்கிகள் இணைப்பை கண்டித்து நாடு முழுவதும் உள்ள வங்கி ஊழியர்கள் நேற்று ஒருநாள் அடையாள வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால், தமிழகம் முழுவதும் உள்ள பொதுத்துறை வங்கிகள் நேற்று வெறிச்சோடி காணப்பட்டன. வங்கி ஊழியர்கள் போராட்டம் பற்றி தெரியாத வாடிக்கையாளர்கள் வங்கிகளுக்கு வந்து ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

வேலைநிறுத்தத்தையொட்டி சென்னை பாரிமுனை 2-வது கடற்கரை சாலையில் உள்ள ஏ.கே.நாயக் பவனில் வங்கி ஊழியர்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு அகில இந்திய வங்கி ஊழியர் சங்க பொதுச்செயலாளர் சி.எச்.வெங்கடாசலம் தலைமை தாங்கினார்.

இதில் மாநில பொதுச்செயலாளர் இ.அருணாசலம், இந்திய வங்கி ஊழியர் சம்மேளன தேசிய செயலாளர் கே.கிருஷ்ணன், தேசிய இணை செயலாளர் சி.பி.கிருஷ்ணன், மாநில பொதுச்செயலாளர் என்.ராஜகோபால் உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.

பெரிய வங்கி அமைப்பு இந்தியாவுக்கு ஆபத்தானது. மக்கள் சேமிப்பு இருக்கக்கூடிய இந்திய வங்கிகள் திறமையாக செயல்பட வேண்டுமே தவிர பெரிய வங்கிகள் தேவை இல்லை. பெரிய வங்கிகள் மூலம் பெரிய கடன்களை கொடுத்து மக்களின் சேமிப்புகளுக்கு சிக்கல்கள் ஏற்படும்.

இந்தியாவில் வங்கிகளை திறமையாக நடத்துவதற்கு ஒரே தடை வராக்கடன் தான். பெரும் முதலாளிகள் பெற்ற கடன்களில் ரூ.15 லட்சம் கோடி வராக்கடன் உள்ளது. கடன் வாங்கி வங்கிகளை ஏமாற்றிவிட்டு வெளிநாடு தப்பி சென்றவர்கள் மீது குற்ற நடவடிக்கை எடுத்து கடனை வசூலிக்க வேண்டும்.

அந்த கடன் தொகையை விவசாயம், வேலைவாய்ப்பு, வறுமை ஒழிப்பு, கல்வி, சுகாதாரம் ஆகியவற்றுக்கு வழங்க வேண்டும். ஆனால் அதற்கு பதில் பெரும் முதலாளிகள் வாங்கிய கடன்களை தள்ளுபடி செய்து கொண்டு இருக்கிறார்கள். இதனை மூடி மறைப்பதற்காக வங்கிகளை இணைத்து பெரிய வங்கியாக மாற்றி பெரும் முதலாளிகளுக்காக தனியார்மயமாக்கக்கூடிய முயற்சி தான் இது. வங்கிகள் இணைப்பால் ஆயிரக்கணக்கான கிளைகள் மூடப்பட்டு உள்ளன.

வராக்கடனை திசை திருப்பும் முயற்சி தான் வங்கிகளை இணைப்பது. வராக்கடனை வசூலிக்காமல் அந்த சுமைகளை வாடிக்கையாளர்களிடம் இருந்து கட்டணங்களாக வாங்கி கொண்டு இருக்கிறார்கள். அதனை தடுக்க வேண்டும். மேலும் வேலைவாய்ப்பு குறையும். ஆண்டுக்கு 70, 80 ஆயிரம் பேர் தேர்வு செய்யப்பட்டு வந்தது, தற்போது 10 ஆயிரமாக குறைந்து உள்ளது.

போராட்டத்தால் ரூ.15 ஆயிரம் கோடி மதிப்பிலான காசோலை பணப்பரிமாற்றம் முடங்கியது. தமிழகத்தில் 35 ஆயிரம் வங்கி ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். வங்கிகள் இணைப்பு முடிவை கைவிடாவிட்டால் வேலைநிறுத்த போராட்டம் அடுத்தக்கட்டத்துக்கு செல்லும் நிலை ஏற்படும்.

Advertisements

Leave a Reply