Home செய்திகள் உலக செய்திகள் உலகிலேயே முதலீட்டுக்கு உகந்த நாடு: ‘பிரிக்ஸ்’ நாடுகளின் தொழில் அதிபர்களுக்கு மோடி அழைப்பு

உலகிலேயே முதலீட்டுக்கு உகந்த நாடு: ‘பிரிக்ஸ்’ நாடுகளின் தொழில் அதிபர்களுக்கு மோடி அழைப்பு

205
0

பிரேசில் நாட்டின் தலைநகரான பிரேசிலியாவில் நேற்றுமுன்தினம் ‘பிரிக்ஸ்’ உச்சி மாநாடு தொடங்கியது. இந்த மாநாட்டில் பிரதமர் மோடி, பிரேசில் அதிபர் ஜெயிர் போல்சொனாரோ, ரஷிய அதிபர் விளாடிமிர் புதின், சீன அதிபர் ஜின்பிங், தென் ஆப்பிரிக்க அதிபர் சிரில் ராமபோசா ஆகியோருடன் பங்கேற்றார்.

‘பிரிக்ஸ்’ உச்சி மாநாட்டின் இடையே ரஷிய அதிபர் விளாடிமிர் புதினை பிரதமர் மோடி சந்தித்து இரு தரப்பு பேச்சு வார்த்தை நடத்தினார். அப்போது அடுத்த ஆண்டு ரஷியாவில் நடக்க உள்ள வெற்றி நாள் கொண்டாட்டத்தில் கலந்து கொள்ளுமாறு பிரதமர் மோடிக்கு ரஷிய அதிபர் புதின், அழைப்பு விடுத்தார்.

இந்த மாநாட்டில் ‘பிரிக்ஸ்’ வர்த்தக பேரவையில் பிரதமர் மோடி நேற்று பேசினார்.

அப்போது அவர் கூறும்போது, “அரசியல் ஸ்திரத்தன்மை, யூகிக்கக்கூடிய கொள்கை மற்றும் வர்த்தகத்துக்கு ஏற்ற சீர்திருத்தங்கள் காரணமாக, இந்தியா உலகிலேயே திறந்த மற்றும் முதலீட்டுக்கு உகந்த சிறந்த பொருளாதார நாடாக திகழ்கிறது. 2024-ம் ஆண்டுக்குள் இந்தியாவை நாங்கள் 5 லட்சம் கோடி டாலர் பொருளாதார நாடாக ஆக்குவதற்கு விரும்புகிறோம். இந்தியாவில் உள்கட்டமைப்பு வசதிகளுக்கு மட்டுமே 1½ லட்சம் கோடி டாலர் (சுமார் ரூ.105 லட்சம் கோடி) தேவைப்படுகிறது” என்றார்.

இந்தியாவில் தொழில் தொடங்குவதற்கு எல்லையில்லா சாத்தியங்களும், எண்ணிறந்த வாய்ப்புகளும் உள்ளதாக பிரதமர் மோடி பெருமிதத்துடன் கூறியதுடன், ‘பிரிக்ஸ்’ நாடுகளின் தொழில் அதிபர்களை இந்தியாவில் வந்து தொழில் தொடங்கி வளர்வதற்கு அழைப்பு விடுத்தார்.

பிரேசில் நாட்டுக்கு இந்தியர்கள் விசா இன்றி செல்வதற்கு அனுமதி அளிக்க முடிவு எடுத்து இருப்பதற்காக, அந்த நாட்டின் அதிபர் ஜெயிர் போல்சொனாரோவுக்கு அவர் நன்றி தெரிவித்துக்கொண்டார்.

‘பிரிக்ஸ்’ மாநாட்டின் இடையே சீன அதிபர் ஜின்பிங்கை பிரதமர் மோடி நேற்று சந்தித்து பேசினார்.

இந்த சந்திப்பின்போது இரு தலைவர்களும் இரு தரப்பு வர்த்தகம் மற்றும் முதலீடு பற்றி விவாதித்ததாக பிரதமர் அலுவலக டுவிட்டர் பக்கத்தில் கூறப்பட்டுள்ளது.

அப்போது அவர், “உங்களை மீண்டும் சந்தித்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். நாம் முதன்முதலாக பிரேசிலில்தான் சந்தித்தோம். இங்குதான் நமது பயணம் தொடங்கியது. தெரியாதவர்களின் பயணம், இப்போது நெருங்கிய நட்பாக மாறி உள்ளது. அப்போதிருந்து நாம் பல முறை பல இடங்களில் சந்தித்து விட்டோம். நீங்கள் எனது சொந்த மாநிலத்துக்கு வந்தீர்கள். என்னை உங்கள் சொந்த கிராமத்துக்கு அழைத்துச்சென்றீர்கள். பீஜிங்குக்கு வெளியே வூகனுக்கு வந்து என்னை வரவேற்றீர்கள். இந்த 5 ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க அளவுக்கு நமது நட்புறவு அமைந்துள்ளது” என கூறினார்.

Advertisements

Leave a Reply