Home செய்திகள் உலக செய்திகள் கடிதத்தில் வளர்ந்த காதல் – பீனிக்ஸ் பெண்

கடிதத்தில் வளர்ந்த காதல் – பீனிக்ஸ் பெண்

254
0

`காதல்’ சொல்லி புரிய வைக்கக்கூடிய விஷயம் இல்லை. அது ஒரு உணர்வு. ஜெயித்தாலும் தோற்றாலும் காதல் காதல்தான். டி.ஆர் பாணியில் சொன்னால் “உன்ன விரும்புறேன்னு உதடு ஒலிச்சாலும் காதல்தான் ஒண்ணுமே சொல்லாம உள்ள ஒலிச்சாலும் காதல்தான்.” பீனிக்ஸ் பறவை சாம்பலிலிருந்து உயிர்த்தெழுவதாக புராண கதைகள் சொல்கின்றன. அமெரிக்காவின் பீனிக்ஸைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் 16 வயதில் தான் சந்தித்த நபர் 23 வருடங்கள் தண்டனை பெற்று சிறை சென்றபோதும் கடிதம் மூலம் காதலை வளர்த்து மனம் கவர்ந்தவரை திருமணம் செய்துள்ளார்.

பீனிக்ஸைச் சேர்ந்த இளம்பெண் நினா ஹோஃப்லெரின் கதையைத் திரைப்படமாக எடுத்தால் கல்லா கட்டலாம். நினா கதையில் கொஞ்சம் ஃபிளாஷ் பேக் போகலாம். அக்டோபர் 2006 நினா முதன்முறையாகத் தனது காதல் கணவரான மைக்கேலை ஒரு வாகன நிறுத்தத்தில் சந்திக்கிறார். அப்போது மைக்கேலுக்கு 17 வயது, நினாவுக்கு 16 வயது. முதல் சந்திப்பு நடந்து சரியாக இரண்டு மாதங்கள் கழித்து ஆயுதம் ஏந்தி கொள்ளையடித்த வழக்கில் மைக்கேல் கைதாகிறார். கொள்ளைக்கூட்டத்தில் 17 வயதுச் சிறுவன் என்ற அடைமொழியோடு அமெரிக்க நாளிதழ்களில் புகைப்படத்துடன் மைக்கேல் தொடர்பான செய்திகள் வெளியாகின. வழக்கை விசாரித்த நீதிமன்றம் மைக்கேலுக்கு 23 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கியது.

மைக்கேலிடம் மனதைப் பறிகொடுத்த நினா சிறைக்குச் செல்வதற்கு முன்பு கடிதம் எழுதுகிறேன் என உறுதியளித்துவிட்டார். முதல் மூன்று வருடங்கள் இவர்களுக்கு இடையேயான உரையாடல்கள் கடிதம் மூலமே நடந்துள்ளன. இந்த இடைவெளியில் மைக்கேல் மீது நினாவுக்கு இன்னும் காதல் அதிகமானது. 2012-ல் சிறையில் இருவரும் சந்தித்துக்கொள்கின்றனர். அப்போது கிடைத்த முதல் முத்தம் இருவருக்கும் இடையே மேலும் நெருக்கத்தை உண்டாக்கியது. அதன்பின் சந்திப்புகள் அடிக்கடி நடந்துவந்தது. ஆனால் நினாவுக்கு ஒரு பயம் இருந்தது. தான் ஒரு தண்டனை கைதியைக் காதலிக்கிறேன் என்று வெளியில் சொன்னால் இந்தச் சமூகம் எப்படி நினைக்கும் எனப் பயந்தார். இதனால் தனது காதலை ரகசியமாக வைத்திருந்தார். தனது தாய் மற்றும் நெருங்கிய தோழி இவர்கள் இருவருக்கு மட்டுமே இந்த விவகாரம் தெரியும்.

மைக்கேல் தனது விருப்பத்தை 2016-ம் ஆண்டு ஜூன் மாதத்தில் தெரிவித்தார். மைக்கேல் விருப்பத்தைக் கேட்ட பின் நினாவுக்கு இருந்த கூச்சம் எல்லாம் காற்றில் பறந்தது. தனது காதலையும் உணர்வுகளையும் வெளிப்படையாகத் தெரிவித்தார். நான் அவனை நம்புகிறேன் அதனால் மற்றவர்களின் பேச்சுகளுக்கு மதிப்பளிக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை என முடிவெடுத்தார். 6 மாத காத்திருப்புக்குப் பின் சட்டப்படி இருவரும் திருமணம் செய்துகொண்டனர். இருவருக்கும் திருமணமானதால் தம்பதியர் 48 மணி நேரங்கள் வரை பார்த்துக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டது. இந்த நேரத்தில் சிறை வளாகத்தில் அனைத்து வசதிகளும் கொண்ட தனி வீடு ஒதுக்கப்பட்டது.

சந்திப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை சமூகவலைதளத்தில் பகிர்த்து தனது காதல் கணவரை உலகுக்கு அறிமுகம் செய்தார். இது மைக்கேலுக்கு மிகுந்த உற்சாகத்தை தந்தது. அதன்பின்னர் சிறையில் நடக்கும் சந்திப்புகளைத் தொடர்ந்து அப்டேட் செய்து வருகிறார். கலிபோர்னியா மாகாணத்தில் 2014-ம் ஆண்டு சிறைத் சட்டத்தில் சில திருத்தங்கள் கொண்டுவரப்பட்டன. அதன்படி 15 ஆண்டுகள் சிறைத் தண்டனை கழித்த இளம் கைதிகளுக்கு 90 நாள்கள் பரோல் வழங்கப்படும். மைக்கேல் 13 ஆண்டுகள் சிறைத் தண்டனையைக் கழித்துவிட்டார். இன்னும் இரண்டு ஆண்டுகள் காத்திருக்க வேண்டும் எனத் தனது வருத்தத்தை நினா தெரிவித்துள்ளார்.

கணவரின் வருகை குறித்து பேசியுள்ள நினா ஹோஃப்லெர், “ மைக்கேல் சிறையிலிருந்து சீக்கிரமே வெளியே வருவார். அந்த நாள்களை எதிர்நோக்கிக் காத்திருக்கிறேன். விடுதலை பெற்று சுதந்திர மனிதனாக அவர் எடுத்து வைக்கும் முதல் அடியை ஆவலோடு எதிர்நோக்கியுள்ளேன். மைக்கேல் புன்னகையோடு எனது வீட்டு வாசலைத் திறக்கும் காட்சிகள் மனதில் நிழலாடுகிறது. அந்த விலைமதிப்பற்ற தருணத்தை எதிர்நோக்கிக் காத்திருக்கிறேன். அந்தத் தருணத்தை என்னால் மறக்கவே முடியாது. அவர் எப்போது வெளியில் வருவார் எனத் தெரியவில்லை. நான் அவருக்காகப் போராடுவேன் எனக் கூறும் நினாவுக்குத் தற்போது 29 வயதாகிறது. சிறையில் இருக்கும் மைக்கேலுக்கு 30 வயதாகிறது.

Advertisements

Leave a Reply