கடலூர் தாழங்குடா மீனவ கிராமத்தை சேர்ந்த மீனவர் அறிவரசன் வழக்கம்போல் இன்று கடலுக்கு மீன்பிடிக்க சென்றுள்ளார். அப்போது தான் வீசிய வலையில், உருளை வடிவிலான மிகப்பெரிய மர்ம பொருள் ஒன்று சிக்கியுள்ளது.
அதனை மீட்டு பத்திரமாக கரைக்கு கொண்டுவந்த அறிவரசன், தேவனாம்பட்டினம் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளார். இதனையடுத்து அங்கு வந்த காவல்துறை அதிகாரிகள் மற்றும் அறிவியல் ஆய்வாளர்கள் அந்த மர்ம பொருளை ஆய்வு செய்தனர்.
ஆய்வில் அந்த மர்ம பொருள், பிரம்மோஸ் BIFP-04 என்ற ஏவுகணையின் உதிரிபாகம் என்பது தெரியவந்தது. இந்தியா – ரஷ்யா கூட்டுத் தயாரிப்பான பிரம்மோஸ் ஏவுகணை அதிக அளவு வெடிபொருட்களை தாங்கி செல்வதுடன், நீண்ட தொலைவில் இருக்கும் இலக்குகளை துல்லியமாகத் தாக்கி அழிக்கும் திறன் கொண்டது.
இதனிடையே கடலோர காவல்படையினர் மற்றும் கடலூர் தேவனாம்பட்டினம் காவல் நிலைய போலீசார் இந்த உதிரிபாகம் எந்த ஆண்டை சேர்ந்தது என்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் உயரதிகாரிகளுக்கும் தகவல் கொடுத்துள்ளனர்.