Home விளையாட்டு பிற விளையாட்டு தேசிய சீனியர் கைப்பந்து ஆண்கள் பிரிவில் தமிழக அணி சாம்பியன்

தேசிய சீனியர் கைப்பந்து ஆண்கள் பிரிவில் தமிழக அணி சாம்பியன்

216
0

68-வது தேசிய சீனியர் சாம்பியன்ஷிப் போட்டி ஒடிசா மாநிலத்தில் உள்ள புவனேசுவரத்தில் கடந்த 25-ந் தேதி முதல் நடந்தது. இதில் ஆண்கள் பிரிவில் 29 அணிகளும், பெண்கள் பிரிவில் 27 அணிகளும் கலந்து கொண்டன.

இதில் நேற்று நடந்த ஆண்கள் பிரிவு இறுதிப்போட்டியில் தமிழக அணி, இந்தியன் ரெயில்வேயை எதிர்கொண்டது. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் தமிழக அணி 25-18, 25-21, 21-25, 25-23 என்ற செட் கணக்கில் ரெயில்வேயை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை தனதாக்கியது. தமிழக அணியில் அஸ்வின், நவீன்ராஜா ஜேக்கப், உக்கரபாண்டியன், வைஷ்ணவ் ஆகியோரின் அபார ஆட்டம் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தது. தோல்வி கண்ட ரெயில்வே அணி 2-வது இடம் பிடித்தது.

தமிழக அணி 9-வது முறையாக இந்த சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி இருக்கிறது. கடைசியாக தமிழக அணி 2013-ம் ஆண்டில் கோப்பையை வென்று இருந்தது. தேசிய போட்டியில் அசத்திய தமிழக அணி நாளை (சனிக்கிழமை) கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயில் மூலம் சென்னை வந்தடைகிறது. அணியினருக்கு ரெயில் நிலையத்தில் வரவேற்பு அளிக்கப்படும் என்று தமிழ்நாடு கைப்பந்து சங்க பொதுச்செயலாளர் ஏ.ஜே.மார்ட்டின் சுதாகர் தெரிவித்தார்.

முன்னதாக நடந்த 3-வது இடத்துக்கான ஆட்டத்தில் கேரள அணி 25-21, 26-24, 25-19 என்ற நேர்செட்டில் நடப்பு சாம்பியன் கர்நாடகாவை சாய்த்து 3-வது இடத்தை சொந்தமாக்கியது. கர்நாடகா அணி 4-வது இடத்துக்கு தள்ளப்பட்டது.

பெண்கள் பிரிவு இறுதிப்போட்டியில் நடப்பு சாம்பியன் கேரளா அணி, இந்தியன் ரெயில்வேயை சந்தித்தது. இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய கேரள அணி 25-18, 25-14, 25-13 என்ற நேர்செட்டில் ரெயில்வேயை தோற்கடித்து மீண்டும் சாம்பியன் பட்டத்தை தன்வசப்படுத்தியது. முன்னதாக நடந்த 3-வது இடத்துக்கான ஆட்டத்தில் மராட்டிய அணி 25-16, 25-23, 25-12 என்ற நேர்செட்டில் மேற்கு வங்காளத்தை பந்தாடியது. தமிழக பெண்கள் அணி கால்இறுதியில் மேற்கு வங்காளத்திடம் தோல்வி அடைந்து வெளியேறியது. சாம்பியன் பட்டம் வென்ற தமிழகம் மற்றும் கேரளா அணிகளுக்கு இந்திய கைப்பந்து சம்மேளன தலைவர் எஸ்.வாசுதேவன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Advertisements

Leave a Reply