2014-ஆம் ஆண்டு அக்டோபர் 2-ஆம் தேதி அன்று மகாத்மா காந்தியின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, ஸ்வச் பாரத் மிஷனை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இந்த திட்டத்துக்காக மோடிக்கு அமெரிக்காவின் பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் ஃபவுண்டேஷன் சார்பாக விருது வழங்கவுள்ளது.
இம்மாதம் கடைசியில் அமெரிக்காவுக்கு செல்லும்போது பிரதமர் இந்த விருதை பெறவுள்ளார் என பிரதமர் அலுவலகத்திற்கான மாநில அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார். இதனை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட அவர் , “மற்றொரு விருது, ஒவ்வொரு இந்தியருக்கும் மேலும் ஒரு பெருமை, பிரதமர் மோடியின் விடாமுயற்சி மற்றும் புதுமையான முயற்சிகள் உலகம் முழுவதிலுமிருந்து விருதுகளை கொண்டு வருகின்றன” என்று பதிவிட்டுள்ளார்.
பில் அண்ட் மெலிண்டா கேட்ஸ் என்பது ஒரு தனியார் அறக்கட்டளை ஆகும். இது மைக்ரோசாப்டின் நிறுவனர் மற்றும் மல்டிபில்லியனரான பில் கேட்ஸ் மற்றும் அவரது மனைவி மெலிண்டா கேட்சுடன் சேர்ந்து இயங்கும் அறக்கட்டளையாகும். இந்த அறக்கட்டளை உலகின் மிகப் பெரிய தனியார் அறக்கட்டளை என்று கூறப்படுகிறது. இதன் முதன்மை குறிக்கோள்கள் சுகாதாரத்தை மேம்படுத்துவதோடு உலகெங்கிலும் உள்ள வறுமையை குறைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இதன் தலைமையகம் அமெரிக்காவின் வாஷிங்டனில் உள்ள சியாட்டிலில் உள்ளது.