எல்.கே.ஜி. படத்தில் ஹீரோவாக நடித்ததையடுத்து இயக்குநராக அறிமுகமாகிறார் ஆர்.ஜே.பாலாஜி. நயன்தாரா முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் இந்தப் படத்துக்கு ’மூக்குத்தி அம்மன்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.
கதை, வசனம் மற்றும் திரைக்கதை எழுதுவதோடு, என்.ஜே.சரவணனுடன் இணைந்து இந்தப் படத்தை இயக்குகிறார் பாலாஜி. இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று ட்விட்டரில் வெளியிடப்பட்டது. முழுக்க முழுக்க நையாண்டி நகைச்சுவை களத்தில் உருவாகும் மூக்குத்தி அம்மன் திரைப்படம், தற்போது ப்ரீ புரொடக்ஷனில் உள்ளது. படத்தில் நடிக்கும் நடிகர்கள் மற்றும் குழுவினர் தொடர்பான கூடுதல் விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
’மூக்குத்தி அம்மன்’ படத்தை, வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனலின் கீழ் ஐசரி கணேஷ் தயாரிக்கிறார். இப்படம் 2020 கோடைகால விடுமுறைக்கு வெளியாகும் என நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையே, ஆர்.ஜே.பாலாஜி இந்தியன் 2 படத்தில் நடிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகவில்லை.
மறுபுறம், நயன்தாரா, ’நெற்றிகண்’ படத்தில் பிஸியாக இருக்கிறார். ரவுடி பிக்சர்ஸின் கீழ் விக்னேஷ் சிவன் இதனை தயாரிக்கிறார். அதோடு, ஏ.ஆர்.முருகதாஸின் ‘தர்பார்’ படத்தில் ரஜினிக்கு ஜோடியாகவும் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.