Home செய்திகள் மடியிலிருந்து விழுந்த குழந்தை

மடியிலிருந்து விழுந்த குழந்தை

154
0

ஒன்றரை வயது குழந்தை ஒன்று, தனியாக சாலையில் தவழ்ந்து செல்வதாக கேரள மாநிலம் மூணாறு அருகே உள்ள ராஜமலை போலீஸாருக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு தகவல் வருகிறது. காட்டுப்பகுதியை ஒட்டிய சாலையில், இரவு 9 மணிக்குமேல் குழந்தை தனியாக இருப்பதாக வனத்துறையினர் மூலம் கிடைத்த அந்தத் தகவலால், பணியில் இருந்த எஸ்ஐ சந்தோஷ் அதிர்ச்சியடைந்தார். உடனடியாக சம்பவ இடத்துக்குச் சென்ற போலீஸார், அந்தக் குழந்தையை மீட்டனர். வனத்துறை செக் போஸ்ட் அருகே இந்தச் சம்பவம் நடந்ததால், அந்தக் குழந்தையை வனத்துறையினர் மீட்டனர்.

அந்தப் பகுதியில் இருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வுசெய்தபோது, அந்த வழியாக வேகமாகச் சென்ற ஜீப் ஒன்றில் இருந்து குழந்தை தவறி விழுவது கண்டுபிடிக்கப்பட்டது. ஜீப்பில் இருந்து விழுந்த குழந்தை அதிர்ஷ்டவசமாக உயிர்பிழைத்திருக்கிறது. இதுகுறித்து ஊடகங்களிடம் பேசிய எஸ்ஐ சந்தோஷ், “குழந்தை குறித்த தகவல் எனக்கு இரவு 9.40 மணியளவில் கிடைத்தது. உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்தோம். 10 மணிக்கெல்லாம் குழந்தையை மீட்டு, முதலுதவி சிகிச்சை அளித்தோம். ஒன்றரை வயதான அந்தப் பெண் குழந்தை ஜீப்பில் இருந்து தவறி விழுந்ததால், தலையில் சிறிய காயம் ஏற்பட்டிருந்தது. சிகிச்சைக்குப் பின், குழந்தை குறித்த தகவல் சுற்றியிருந்த காவல் நிலையங்களுக்குத் தெரிவிக்கப்பட்டது.

மற்றொரு காவல்நிலையத்தில் குழந்தை குறித்து புகார் ஒன்று கொடுக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து, அந்தக் காவல் நிலையத்தைத் தொடர்புகொண்டு பெற்றோரைக் கண்டுபிடித்தோம். விசாரணைக்குப் பின்னர், மறுநாள் காலையில் குழந்தையைப் பத்திரமாக பெற்றோரிடம் ஒப்படைத்தோம்” என்றார்.

போலீஸார் விசாரணையில், இடுக்கி மாவட்டம் கம்பிளிக்கண்டம் பகுதியைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர், பழனி கோயிலுக்குச் சென்றுவிட்டு ஜீப் ஒன்றில் சனிக்கிழமை இரவு வீடு திரும்பிக் கொண்டிருந்திருக்கின்றனர். குழந்தையை மடியில் வைத்துக் கொண்டு ஜீப்பில் தாய் அமர்ந்து இருந்திருக்கிறார். பயணக் களைப்பில் அவர் தூங்கியபோது, குழந்தை அவர் மடியிலிருந்து தவறி விழுந்திருக்கிறது. குழந்தை விழுந்தபின்னர், ஏறக்குறைய 50 கி.மீ பயணம் செய்தபிறகே குழந்தை இல்லாதது அந்தக் குடும்பத்தினருக்குத் தெரியவந்திருக்கிறது. இதையடுத்து, குழந்தையைக் காணவில்லை என வெள்ளத்தூவல் காவல்நிலையத்தில் அவர்கள் புகார் அளித்திருக்கிறார்கள். நடந்ததைக் கேட்டறிந்த போலீஸார், குழந்தையைப் பெற்றோர்களிடம் ஒப்படைத்தனர்.

Advertisements

Leave a Reply