Home செய்திகள் 130 கோடி இந்தியர்களின் பங்களிப்பினால் மட்டுமே இந்தியாவை மகத்தான தேசமாக உருவாக்க முடியும்

130 கோடி இந்தியர்களின் பங்களிப்பினால் மட்டுமே இந்தியாவை மகத்தான தேசமாக உருவாக்க முடியும்

204
0

சென்னை ஐ.ஐ.டி. பட்டமளிப்பு விழா மற்றும் சிங்கப்பூர்-இந்தியா ‘ஹேக்கத்தான்’ போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி நேற்று சென்னை வந்தார். சென்னை விமான நிலையத்தில் அவரை தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் வரவேற்றனர்.

இதேபோல பா.ஜ.க. மூத்த நிர்வாகிகள் பொன்.ராதாகிருஷ்ணன், சி.பி.ராதாகிருஷ்ணன், இல.கணேசன், எச்.ராஜா மற்றும் பா.ஜ.க. நிர்வாகிகள், தொண்டர்களும் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். இதையடுத்து விமான நிலைய வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த சிறிய மேடையில் பா.ஜ.க. தொண்டர்கள் மத்தியில் நரேந்திர மோடி பேசியதாவது:-

நாடாளுமன்ற பொதுத்தேர்தலுக்கு பின்னர் சென்னைக்கு எனது முதலாவது பயணம் இதுவாகும். என்னை வரவேற்பதற்காக பெரும் எண்ணிக்கையில் வந்திருக்கும் உங்கள் அனைவருக்கும் நான் மிகவும் கடன்பட்டுள்ளேன். அண்மையில் எனது அமெரிக்க பயணத்தில் இந்திய சமூகத்தினரிடையே நான் தமிழில் உரையாற்றியபோது, உலகின் தொன்மையான மொழி தமிழ் என்று கூறியதை அமெரிக்காவில் உள்ள அனைத்து ஊடகங்களும் விரிவாக வெளியிட்டிருந்தன. எனது அமெரிக்க பயணத்தின்போது, மகத்தான எதிர்பார்ப்புகளுடன் இந்தியாவை உலகம் பார்த்துக்கொண்டிருப்பதை நான் உணர்ந்தேன்.

அந்த எதிர்பார்ப்பு நாளுக்கு, நாள் அதிகரித்து வருகிறது. இப்போது இந்தியாவை மகத்தான தேசமாக்குவது மட்டும் நமது பொறுப்பாக இல்லாமல், உலக சமூகத்தின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதையும் கூட, நாம் ஏற்க வேண்டியுள்ளது. இதனை மத்திய அரசால் மட்டும் செய்து விட முடியாது. 130 கோடி இந்தியர்களின் பங்களிப்பினால் மட்டும் தான் இது சாத்தியமாகும். ஏழையோ, பணக்காரரோ, நகரவாசியோ, கிராமவாசியோ, இளைஞரோ, முதியவரோ யாராக இருந்தாலும், நாட்டின் மூலை முடுக்கில் உள்ள இந்தியர்கள் ஒவ்வொருவரின் முயற்சியால்தான் இதனை சாத்தியமாக்க முடியும்.

பொதுமக்கள் பங்கேற்பின் மூலம் பலவற்றை நாம் வெற்றிகரமாக சாதித்திருக்கிறோம். அதே வழியில் ஒருமுறை மட்டும் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை நாட்டிலிருந்து நாம் விரட்டவேண்டும். பிளாஸ்டிக்கை இந்தியாவிலிருந்து ஒழிக்கவேண்டும் என்று நான் விரும்புவதாக சிலர் தவறுதலாக பொருள் கூறி வருகிறார்கள். நான் அவ்வாறு கூறவில்லை. ஒருமுறை மட்டும் பயன்படுத்தும் பிளாஸ்டிக்கை நாட்டிலிருந்து ஒழிக்க விரும்புவதாகத்தான் கூறினேன். இந்த வகை பிளாஸ்டிக்குகளை ஒருமுறை மட்டும்தான பயன்படுத்த முடியும். அவை பிற்காலத்தில் ஏராளமான பிரச்சினைகளை உருவாக்குகின்றன.

மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த நாளான அக்டோபர் 2-ந்தேதி நாம் பாதயாத்திரை மேற்கொள்ளவேண்டும். இந்த பாதயாத்திரைகள் மூலம் காந்தியின் சிந்தனைகளை பரப்ப வேண்டும். பெரும் எண்ணிக்கையில் என்னை வரவேற்க வந்திருக்கும் உங்களுக்கு நான் மீண்டும் நன்றி தெரிவிக்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

சென்னையில் நடந்த நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட பிறகு பிரதமர் மோடி, மதியம் 1.20 மணிக்கு சென்னை பழைய விமான நிலையம் வந்தார். அங்கு அவரை கவர்னர் பன்வாரிலால் புரோகித், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் பொன்னாடை அணிவித்து வழியனுப்பி வைத்தனர்.

இதையடுத்து தனி விமானத்தில் மோடி, டெல்லிக்கு புறப்பட்டு சென்றார்.

Advertisements

Leave a Reply