தர்மபுரி மாவட்டம், இலக்கியம்பட்டியை சேர்ந்தவர் பிரசன்னகுமார் (வயது 18). கோவையில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். இவர் தன்னுடன் படிக்கும் கோவை பீளமேட்டை சேர்ந்த விக்னேஷ் (18) என்பவருடன் காந்திபுரம் பஸ்நிலையம் அருகே ஸ்கூட்டரில் சென்றார். அப்போது பஸ்நிலையத்துக்குள் வேகமாக திரும்பிய அரசு டவுன்பஸ், ஸ்கூட்டர் மீது மோதியது.
மோதிய வேகத்தில் மாணவர்கள் 2 பேரும் பஸ்சின் முன்சக்கரத்தில் சிக்கினர். இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினரும், பஸ்சில் இருந்தவர்களும் கூச்சலிட்டனர். பஸ் சக்கரத்தில் சிக்கியதால் இருவரும் ஸ்கூட்டருடன் சிறிது தூரம் இழுத்துச்செல்லப்பட்டனர்.
பின்னர் டிரைவர் பஸ்சை நிறுத்தியதும் பஸ்சில் இருந்த பயணிகள் இறங்கி 2 பேரையும் மீட்டனர். இந்த விபத்தில் மாணவர் பிரசன்னகுமார் பரிதாபமாக இறந்தார். விக்னேசுக்கு கோவை அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இ்ந்த விபத்து தொடர்பாக பஸ் டிரைவர் சவுந்திரபாண்டி மீதும், கண்டக்டர் செல்வகுமார் மீதும் கோவை கிழக்குப்பகுதி போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.