Home செய்திகள் எகிப்தில் இருந்து வெங்காயம் சென்னை வந்தது

எகிப்தில் இருந்து வெங்காயம் சென்னை வந்தது

158
0

பல்லாரி வெங்காயம் விலை கடந்த 2 மாதங்களாக ஏதோ தங்கம் விலை உயர்வை போலவே பார்க்கப்பட்டது. அந்த அளவுக்கு வரலாறு காணாத விலை உயர்வை சந்தித்தது. சில்லரை கடைகளில் ஒரு கிலோ பல்லாரி வெங்காயம் ரூ.200 வரை விற்பனை செய்யப்பட்டது.

மராட்டியம்(நாசிக்), கர்நாடகா(பெல்லாரி), ஆந்திரா ஆகிய மாநிலங்களில் இருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு பல்லாரி(பெரிய) வெங்காயம் அனுப்பப்படுகிறது. இதில் நாசிக் வெங்காயம் தான் முதல் தரமானது என்று கூறப்படுகிறது.

மேற்கண்ட மாநிலங்களில் பெய்த கனமழையால் வெங்காய விளைச்சல் பாதிக்கப்பட்டதால் அதன் வரத்து குறைந்தது. அதன் விலை ராக்கெட் வேகத்தில் உயரத்தொடங்கியது.

கடந்த செப்டம்பர் மாத இறுதியில் ஒரு கிலோ பல்லாரி வெங்காயம் ரூ.50 வரை தான் விற்பனை செய்யப்பட்டது. அதன்பின்னர், விலை உயர தொடங்கி, மொத்த மார்க்கெட்டில் ரூ.180 வரையிலும், சில்லரை கடைகளில் ரூ.200 வரையிலும் ஒரு கிலோ வெங்காயம் விற்பனை ஆனது.

பல்லாரி வெங்காயம் தேவையை சமாளிக்க எகிப்தில் இருந்து வெங்காயம் இறக்குமதி செய்ய மத்திய அரசு முடிவு செய்தது. அதன்படி எகிப்தில் இருந்து மும்பைக்கு 40 ஆயிரம் டன் பெரிய வெங்காயம் வந்து இருப்பதாக கூறப்படுகிறது. அங்கு இருந்து திருச்சி, மதுரை மற்றும் சென்னைக்கு வெங்காயம் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டுள்ளது.

எகிப்தில் இருந்து திருச்சிக்கு 300 டன்னும், மதுரைக்கு 130 டன்னும், சென்னைக்கு 60 டன்னும் வெங்காயம் இதுவரை வந்து இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் காரணமாக வெங்காயத்தின் விலை சற்று குறைய தொடங்கி உள்ளது.

மொத்த மார்க்கெட்டில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு ரூ.180 வரை விற்பனை செய்யப்பட்டு வந்த தரமான (நாசிக்) பல்லாரி வெங்காயம், தற்போது ரூ.130 முதல் ரூ.140 வரை விற்பனை செய்யப்படுகிறது.

அதற்கு அடுத்த தரமான கர்நாடகா வெங்காயம் ரூ.120 முதல் ரூ.130-க்கும், ஆந்திர வெங்காயம் ரூ.80 முதல் ரூ.100-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதுமட்டுமில்லாமல், சிறிய அளவிலான பல்லாரி வெங்காயம் ரூ.50 முதல் ரூ.70 வரையிலும் கூட விற்பனை செய்யப்படுவதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் மட்டும் கடந்த 3 நாட்களில் கிலோவுக்கு ரூ.40 வரை குறைந்துள்ளது.

எகிப்து வெங்காயத்தை பெரும்பாலும் ஓட்டல்கள், கடைகளுக்கு வாங்கி செல்கின்றனர் என்று வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். மேலும் இந்திய வெங்காயம் போல் எகிப்து வெங்காயம் சுவையும், காரமும் இல்லாத காரணத்தினாலும், அளவில் பெரியதாக இருப்பதாலும் மக்கள் அதை வாங்க தயங்குகின்றனர் என்று வியாபாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.

எகிப்து வெங்காயம் தமிழகத்துக்கு கொண்டுவரப்படுவது இதுதான் முதல் முறை ஆகும். இதற்கு முன்பு வெங்காயம் தட்டுப்பாடு ஏற்பட்ட நேரத்தில் பாகிஸ்தான் மற்றும் வங்காளதேசத்தில் இருந்து தான் வெங்காயம் இறக்குமதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Advertisements

Leave a Reply