Home விளையாட்டு கிரிக்கெட் கடைசி ஒரு நாள் கிரிக்கெட்டில் இந்தியா வெற்றி

கடைசி ஒரு நாள் கிரிக்கெட்டில் இந்தியா வெற்றி

130
0

கட்டாக்கில் நேற்றிரவு நடந்த வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான பரபரப்பான கடைசி ஒரு நாள் போட்டியில் இந்திய அணி 316 ரன்கள் இலக்கை விரட்டிப்பிடித்து வெற்றி பெற்றதோடு தொடரையும் வசப்படுத்தியது.

இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டி ஒடிசா மாநிலம் கட்டாக்கில் உள்ள பராபதி ஸ்டேடியத்தில் நேற்று பகல்-இரவு ஆட்டமாக நடந்தது. இந்திய அணியில் காயமடைந்த தீபக் சாஹருக்கு பதிலாக அறிமுக வீரராக நவ்தீப் சைனி இடம் பிடித்தார். வெஸ்ட் இண்டீஸ் அணியில் மாற்றம் இல்லை.

‘டாஸ்’ ஜெயித்த இந்திய கேப்டன் விராட் கோலி முதலில் வெஸ்ட் இண்டீசை பேட் செய்ய பணித்தார்.

50 ஓவர் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 5 விக்கெட் இழப்புக்கு 315 ரன்கள் குவித்தது. சவாலான ஸ்கோரை எட்டுவதற்கு வித்திட்ட பொல்லார்ட் 74 ரன்களுடனும் (51 பந்து, 3 பவுண்டரி, 7 சிக்சர்), ஹோல்டர் 7 ரன்னுடனும் அவுட் ஆகாமல் இருந்தனர். கடைசி 10 ஓவர்களில் மட்டும் அவர்கள் 118 ரன்கள் சேகரித்து மிரட்டினர்.

இந்திய அணி 48.4 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 316 ரன்கள் குவித்து 4 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றியை சுவைத்தது. ஜடேஜா 39 ரன்களுடனும் (31 பந்து, 4 பவுண்டரி), ஷர்துல் தாகூர் 17 ரன்னுடனும் (6 பந்து, 2 பவுண்டரி, ஒரு சிக்சர்) அவுட் ஆகாமல் இருந்தனர். கோலி ஆட்டநாயகனாகவும், ரோகித் சர்மா தொடர்நாயகனாகவும் (3 ஆட்டத்தில் 258 ரன்) அறிவிக்கப்பட்டனர்.

இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. முன்னதாக முதலாவது ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீசும், 2-வது ஆட்டத்தில் இந்தியாவும் வெற்றி பெற்றிருந்தன. ஒரு நாள் கிரிக்கெட்டில் வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக இந்திய அணி தொடர்ச்சியாக வென்ற 10-வது தொடர் இதுவாகும். ஏற்கனவே 20 ஓவர் தொடரையும் 1-2 என்ற கணக்கில் பறிகொடுத்த வெஸ்ட் இண்டீஸ் அணி வெறுங்கையுடன் தாயகம் திரும்புகிறது.

Advertisements

Leave a Reply