Home மற்றவை பொருளாதாரத் தேடலுக்காகப் பிரிந்திருந்தாலும், அவ்வப்போது உறவினர்களுடன் கூடி மகிழ்ந்து உறவுகளையும் வளர்க்க வேண்டும்.

பொருளாதாரத் தேடலுக்காகப் பிரிந்திருந்தாலும், அவ்வப்போது உறவினர்களுடன் கூடி மகிழ்ந்து உறவுகளையும் வளர்க்க வேண்டும்.

244
0

மும்பையைச் சேர்ந்தவர் ரித்துராஜ் சஹானி. மனைவியுடன், அமெரிக்காவில் வசிக்கும் இவர், அங்குள்ள, பிரபல, ஐ.டி., நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். தந்தை இறந்துவிட, இவருடைய தாய் ஆஷா சஹானி மட்டும் மும்பையில் ஓர் அடுக்குமாடி குடியிருப்பில் தனியாக வசித்து வந்தார். ரித்துராஜ், ஆண்டுக்கு ஒருமுறை மட்டும்,

இந்தியா வந்து தாயைச் சந்தித்துவிட்டுச் செல்வது வழக்கம். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இந்தியா வந்திருந்தார் ரித்துராஜ், நீண்ட நேரம், ‘காலிங்பெல்’ அடித்தும் அவரின் தாய் கதவைத் திறக்கவில்லை. பூட்டை உடைத்து வீட்டிற்குள் சென்ற ரித்துராஜுக்கு பெரும் அதிர்ச்சி. உள்ளே அவரின் தாய், இறந்து பல நாள்கள் ஆன நிலையில், எலும்புக்கூடாக கிடந்துள்ளார்.

விசாரணையில் 2016-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் தன் தாயுடன் கடைசியாகப் பேசியதாக ரித்துராஜ் கூறியதைக் கேட்டுக் காவல்துறையினர் அதிர்ந்து போனார்கள். ஆஷா மகனிடம் கடைசியாக போனில் பேசும்போது, “என்னால் தனியாக வசிக்க முடியவில்லை. முதியோர் இல்லத்திலாவது சேர்த்துவிடு” என்று வருத்தத்தோடு பேசியிருக்கிறார். ஆஷாவின் மரணம் ரித்துராஜை மீளாச் சோகத்தில் ஆழ்த்தியது.

இது, ஏதோ ஒரு திரைப்படத்தின் காட்சி என்று நினைத்தால் ஏமாந்து போவீர்கள். மகாராஷ்டிராவில் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் நடந்த உண்மைச் சம்பவம். நகர வாழ்க்கையில், பொருளாதாரத்தை மட்டுமே இலக்காக வைத்துச் செயல்படுகிற இயந்திரமய வாழ்க்கைமுறையால், பல பிள்ளைகளின் நிலை ரித்துராஜின் நிலைபோலவே மாறிவிடுகின்றன. இன்று குழந்தைகளோடு பேசி மகிழ பெற்றோர்களுக்கோ, வயதான பெற்றோர்களோடு பேசி மகிழப் பிள்ளைகளுக்கோ கொஞ்சமும் நேரமில்லை.

தன்னலமற்ற அன்பை அள்ளித்தர தாய், கண்டிப்பையும் கனிவையும் காட்டத் தந்தை, அரவணைக்கப் பாட்டி, தட்டிக்கொடுக்கத் தாத்தா என்றிருந்த உன்னதமான குடும்ப உறவுகள் இன்றைய வாழ்க்கை முறையில் சிதைந்துவிட்டன.

மேற்கத்திய மோகத்தால் நாம் காலங்காலமாகப் பின்பற்றி வந்த உழைப்பு மிக்க வாழ்க்கை முறையையும், ஆரோக்கியமான உணவுப்பழக்கத்தையும் தொலைத்துவிட்டோம். இதனால், 60 வயதுக்கு மேல் வர வேண்டிய சர்க்கரை நோய், உடல் பருமன், இதய நோய்களெல்லாம், பருவ வயதிலேயே வந்து உயிர்ப் பலி கேட்கின்றன. அது மட்டுமல்லாது, சிறு வயதிலேயே மனஅழுத்தம், மன உளைச்சல், பிரச்னைகளை எதிர்கொள்ள முடியாமை என மன ரீதியான பலவீனங்களும் அதிகரித்து விட்டன என்கிறார்கள் மனநல மருத்துவர்கள்.

Advertisements

Leave a Reply