Home செய்திகள் உலக செய்திகள் லண்டனில் எடப்பாடி பழனிசாமி: மருத்துவ சேவைகளை மேம்படுத்தும் ஒப்பந்தங்கள்

லண்டனில் எடப்பாடி பழனிசாமி: மருத்துவ சேவைகளை மேம்படுத்தும் ஒப்பந்தங்கள்

231
0

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, வெளிநாட்டில் செயல்படுத்தப்படும் புதிய தொழில்நுட்பங்களை அறிந்து, அவற்றை தமிழ்நாட்டில் செயல்படுத்திடவும், வெளிநாடுவாழ் தமிழர்கள் மற்றும் பிற முதலீட்டாளர்களிடம் இருந்து தமிழ்நாட்டுக்கு அதிக அளவில் முதலீடுகளை பெற்றிடவும் இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளுக்கு 14 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
நேற்று முன்தினம் சென்னை விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட எடப்பாடி பழனிசாமி நேற்று முன்தினம் லண்டன் சென்றடைந்தார். அங்கு அவரை லண்டன் வாழ் தமிழர்கள் ஏராளமானோர் வரவேற்றனர்.

இதன்பின்னர், தமிழகத்தில் மருத்துவ சேவைகளை மேம்படுத்தும் நோக்கத்தில் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டார்.

இந்த நிகழ்வின் போது வழக்கமான உடையில் இருந்து எடப்பாடி பழனிசாமி மாறுபட்டு காணப்பட்டார். அதாவது, அவர் கோட்-சூட் அணிந்து வித்தியாசமான தோற்றத்தில் இருந்தார்.

லண்டனில் நடந்த நிகழ்வு குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

லண்டன் சென்ற முதல்-அமைச்சர், அங்குள்ள மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களின் பணிகளை கண்டறிந்தார். அதனை தமிழ்நாட்டில் செயல்படுத்துகின்ற வகையில் தமிழக அரசுக்கும், சர்வதேச திறன்கள் மேம்பாட்டு கழக நிறுவனத்திற்கும் இடையே அவரது முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.

தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் 108 அவசரகால ஆம்புலன்ஸ் சேவை, இந்தியாவிலேயே மிகச் சிறப்பான ஆம்புலன்ஸ் சேவைகளில் ஒன்றாகும். தமிழ்நாட்டில் தற்போது 942 ஆம்புலன்ஸ் வசதிகள், நாள் ஒன்றுக்கு சராசரியாக 3,300 அவசர விபத்து சேவைகளை கையாளுகின்றன.

இந்த 108 அவசரகால ஆம்புலன்ஸ் சேவையை மேலும் செம்மையாக்கும் நோக்கிலும், லண்டன் ஆம்புலன்ஸ் சேவையின் சிறப்பு அம்சங்களை தமிழ்நாட்டில் செயல்படுத்திடவும், விபத்தினால் ஏற்படும் உயிர் இழப்பினை மேலும் குறைத்திடவும் லண்டன் ஆம்புலன்ஸ் சேவை மையத்திற்கு முதல்-அமைச்சர் நேரில் சென்று, ஆம்புலன்ஸ் இயக்கம் பற்றியும், விபத்துகள் பற்றி தகவல் தெரிவிக்க பயன்படுத்தும் கால் சென்டரின் இயக்கம் பற்றியும், அதன் செயல்பாடுகளையும் பார்வையிட்டு கேட்டறிந்தார்.

தொற்று மற்றும் தொற்றா நோய்களைத் தடுத்தல், கட்டுப்படுத்துதல், சிகிச்சை அளித்தல் ஆகியவற்றில் தமிழகம் முன்னோடி மாநிலமாக விளங்கி வருகிறது. ஒருங்கிணைந்த நோய் கண்காணிப்பு திட்டத்தின் மூலம் மாநிலத்தில் ஏற்படும் தொற்று நோய்களின் நிலைமை குறித்து தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது.

இந்த திட்டத்தை தமிழ்நாட்டில் மேலும் செம்மையாக செயல்படுத்திடும் வகையில் தொற்று நோய் தடுப்பு நடவடிக்கைகளில் சிறப்பாக செயல்பட்டு வரும் லண்டனின் பழமை வாய்ந்த லண்டன் ஸ்கூல் ஆப் ஹைஜீன் மற்றும் டிராபிகல் மெடிசன் நிறுவனத்துடன், டெங்கு, மலேரியா போன்ற நோய்களை ஏற்படுத்தும் கொசுக்களை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மற்றும் அந்த நோய்களை தடுக்க கையாளும் வழிமுறைகள் தொடர்பாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் வழிகாட்டுதல் அறிக்கை கையெழுத்தானது.

லண்டனில் உள்ள கிங்ஸ் மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழ்நாட்டில் கிங்ஸ் மருத்துவமனையின் கிளைகளை நிறுவிட, தமிழக அரசிற்கும், கிங்ஸ் மருத்துவமனைக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

இந்த நிகழ்ச்சியின் போது தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர், சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் பீலா ராஜேஷ், முதல்-அமைச்சரின் செயலாளர்கள் டாக்டர் எம்.சாய்குமார், எஸ். விஜயகுமார், டாக்டர் பி.செந்தில்குமார் ஆகியோர் உடன் இருந்தனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisements

Leave a Reply