Home செய்திகள் சென்னை ஐகோர்ட்டுக்கு வரும் வக்கீல்கள் அடையாள அட்டை காட்ட வேண்டும்

சென்னை ஐகோர்ட்டுக்கு வரும் வக்கீல்கள் அடையாள அட்டை காட்ட வேண்டும்

187
0

சென்னை ஐகோர்ட்டு தலைமை பதிவாளர் சி.குமரப்பனுக்கு, நேற்று முன்தினம் வெடிகுண்டு மிரட்டல் கடிதம் வந்தது. டெல்லியைச் சேர்ந்த ஹர்தர்ஷன் சிங் நாக்பால் என்பவரது பெயரில் வந்துள்ள அந்த கடிதத்தில், ‘நான் சர்வதேச காலிஸ்தான் ஆதரவு பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்தவன். நேரத்துக்கு நேரம் இருப்பிடத்தை மாற்றிக்கொண்டே இருப்பேன். வருகிற 30-ந் தேதி எனது மகனுடன் சேர்ந்து ஐகோர்ட்டு வளாகத்தில் பல்வேறு இடங்களில் வெடிகுண்டுகளை வெடிக்க செய்வேன்’ என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.

இந்த கடிதம் குறித்து ஐகோர்ட்டு போலீஸ் நிலையத்தில், தலைமை பதிவாளர் சி.குமரப்பன் புகார் செய்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் ஐகோர்ட்டு பாதுகாப்பு குறித்தும் தீவிரமாக ஆலோசனை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், சென்னை ஐகோர்ட்டு மூத்த நீதிபதிகள் வினீத் கோத்தாரி, எஸ்.மணிக்குமார், கே.கே.சசிதரன் ஆகியோருடன், சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன், மத்திய தொழில் பாதுகாப்புப்படை சீனியர் சூப்பிரண்டு ஸ்ரீராம் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பாதுகாப்பு குறித்து ஆலோசனை நடத்தினர்.

பின்னர், ஐகோர்ட்டு வளாகத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

இந்தநிலையில், ஐகோர்ட்டு பாதுகாப்பு பிரிவு கூடுதல் சூப்பிரண்டு, ஐகோர்ட்டு தலைமை பதிவாளர், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில், சென்னை ஐகோர்ட்டு வக்கீல்கள் சங்கம், பெண் வக்கீல்கள் சங்கம் உள்ளிட்ட சங்கங்களுக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார்.

அதில், ‘ஐகோர்ட்டின் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக, ஐகோர்ட்டுக்குள் வரும் அனைத்து வக்கீல்களும் தங்களது அடையாள அட்டையை போலீசாரிடம் காட்ட வேண்டும். வக்கீல் சீருடையில் இருக்கும் வக்கீல்களும், தங்களது அடையாள அட்டையை கண்டிப்பாக காட்ட வேண்டும். அனைவரது வாகனங்களும் சோதனைக்கு பின்னரே, ஐகோர்ட்டு வளாகத்துக்குள் அனுமதிக்கப்படும். இதற்கான ஒத்துழைப்பை போலீசாருக்கு வழங்கும்படி வக்கீல்களுக்கு உரிய அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும்’ என்று கூறியுள்ளார்.

Advertisements

Leave a Reply