கோவை மாவட்டம் ராவுத்தர் பிரிவு அருகே நான்கு இளைஞர்கள் ரயில் மோதி இறந்த விவகாரம் பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது. நேற்று இரவு 10:30 மணி அளவில் ஆழப்புலா – சென்னை எக்ஸ்பிரஸ் ரயில் செல்லும் வழித்தடத்தில் அமர்ந்து இந்த பொறியியல் இளைஞர்கள் மது அருந்திக் கொண்டிருந்தனர்.
கொடைக்கானலை சேர்ந்த சித்திக் ராஜா, நிலக்கோட்டையை சேர்ந்த ராஜசேகர், ராஜபாளையத்தை சேர்ந்த கருப்பசாமி மற்றும் கௌதம் ஆகிய நான்கு நபர்களும் விரைவாக வந்த அந்த ரயில் மோதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
சித்திக் மற்றும் ராஜசேகர் இருவரும் சூலூர் அருகே இருக்கும் தனியார் பொறியியல் கல்லூரி ஒன்றில் முறையே நான்காம் ஆண்டு மற்றும் மூன்றாம் ஆண்டு படித்து வருகின்றனர். கருப்புசாமி மற்றும் கௌதம் ஆகியோர் தங்களின் அரியர்களை க்ளியர் செய்வதற்காக கோவை வந்துள்ளனர்.
தேனியை சேர்ந்த விக்னேஷ் என்பவர் காயங்களுடன் தப்பித்துக் கொண்டார். ரயிலை ஓட்டி வந்தவர் தன்னுடைய உயர் அதிகாரிகளுக்கு தகவலை கூற அவர்கள் காவல் நிலையத்திற்கு தகவல்கள் அளித்தனர். அவர்களின் சிதறிய உடல்கள் கோவை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரேதபரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. போத்தனூர் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடந்து வருகிறது.
ரயில்வே கேட் லெவல் கிராஸிஙின் போது போன் பேசிக் கொண்டே செல்வது, ரயில் வரும் போது செல்ஃபி எடுப்பேன் என்று அதிகப்பிரசிங்கம் செய்வது போன்ற காரணங்களால் ஏற்கனவே பல உயிர்கள் பலியாகியுள்ளன. இந்நிலையில் மது அருந்திவிட்டு ரயில்வே ட்ராக்கில் உயிரிழந்த மாணவர்களால் சூலூர் பகுதி முழுவதும் சோகத்தில் ஆழ்ந்துள்ளது.