Home செய்திகள் மீண்டும் சூடுபிடிக்கும் குட்கா ஊழல் வழக்கு

மீண்டும் சூடுபிடிக்கும் குட்கா ஊழல் வழக்கு

190
0

நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய குட்கா ஊழல் வழக்கை சி.பி.ஐ. போலீசார் தற்போது விசாரித்து வருகிறார்கள். இந்த ஊழல் வழக்கில் குட்கா வியாபாரியான தொழில் அதிபர் மாதவராவ் மற்றும் அரசு அதிகாரிகள் 3 பேர் உள்பட 6 பேரை சி.பி.ஐ. போலீசார் கைது செய்தனர்.

அவர்கள் 6 பேர் மீதும் முதல் கட்டமாக சி.பி.ஐ. போலீசார் கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர். தொடர்ந்து விசாரணை நடப்பதாகவும், உரிய ஆதாரங்களின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் மீது, 2-வது கட்ட குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்படும் எனவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

இந்த வழக்கு தொடர்பாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், முன்னாள் போலீஸ் டி.ஜி.பி.க்கள் ஜார்ஜ், டி.கே.ராஜேந்திரன் மற்றும் சில அதிகாரிகளின் வீடுகளில் போலீசார் சோதனை நடத்தினார்கள்.

இந்த ஊழல் அரங்கேற்றப்பட்ட சமயத்தில் வடசென்னை பகுதியில் கூடுதல் கமிஷனர் மற்றும் இணை கமிஷனர்களாக பணியாற்றிய சிலரிடமும், கமிஷனர் அலுவலகத்தில் பணியாற்றிய சில உயர் போலீஸ் அதிகாரிகளிடமும் போலீசார் விசாரணை நடத்தினார்கள்.

குட்கா ஊழல் வழக்கு தொடர்பாக மத்திய அரசின் அமலாக்கத்துறையும் தனியாக களத்தில் இறங்கி விசாரணை நடத்தியது. குட்கா வியாபாரிகளின் பல கோடி மதிப்புள்ள சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கி வைத்துள்ளது. ஏற்கனவே சி.பி.ஐ. விசாரணை வளையத்தில் சிக்கிய 20 போலீஸ் அதிகாரிகள் மற்றும் சுங்கத்துறை, கலால்துறை, உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் 10 பேர் என மொத்தம் 30 அதிகாரிகளுக்கு விசாரணைக்கு ஆஜராகுமாறு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளது.

Advertisements

Leave a Reply