சபரிமலை ஐயப்பன் கோயில் பயணத்துக்கு மூன்று விதமான முன்பதிவு இருப்பது மாற்றப்பட்டு பக்தர்கள் ஒரே முன் பதிவில் சபரி மலைக்கு செல்ல வசதி செய்யப்படும் என்று திருவிதாங்கூர் தேவேசம்போர்டு தலைவர் பத்மகுமார் தெரிவித்துள்ளார். மேலும், பக்தர்கள் தங்கள் வீடுகளில் இருந்தே முன்பதிவு செய்யலாம் என்று தெரிவித்துள்ளார்.
கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பல மாநிலங்களில் இருந்து பக்தர்கள் வந்து தரிசித்து செல்கின்றனர். கார்த்திகை மாதம் சபரிமலை சீசன் தொடங்க உள்ளது. சபரிமலைக்கு பயணம் செய்ய மூன்றுவிதமான முன் பதிவுகள் இருந்து வருகிறது.
இந்நிலையில், கேரளாவில் உள்ள பதமநாபபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய திருவிதாங்கூர் தேவசம்போர்டு தலைவர் பத்மகுமார், “சபரிமலைக்கு வாகனங்களில் வரும் பக்தர்கள், நிலக்கல்லில் இறங்கி, பின்னர், கேரள அரசு பேருந்தில் பம்பை சென்று திரும்ப வேண்டும் என முடிவு செய்து, கடந்த சீசனில் அது நடைமுறைப்படுத்தப்பட்டது.ஆனால், கேரள உயர் நீதிமன்றத்தின் புதிய உத்தரவுப்படி, பக்தர்களின் வாகனங்கள் பம்பை வரை செல்லலாம். அதனால், பயணம், தரிசனம், அறை முன்பதிவு, வழிபாடு போன்ற அனைத்துக்கும், ஒரே இடத்தில் முன்பதிவு செய்வது பற்றி ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
சபரிமலைக்கு வரும் ஐயப்ப பக்தர்கள் இந்த முன்பதிவை தங்கள் வீடுகளில் இருந்தே செய்ய முடியும். அவ்வாறு செய்ய முடியாதவர்களுக்கு நிலக்கல் மற்றும் பம்பையில் தேவம்போர்டு சார்பில் முன்பதிவு செய்வதற்கு வசதி ஏற்படுத்தப்படும். இதன் மூலம், சபரிமலைக்கு யார் வருகின்றனர், எத்தனை பேர் வருகின்றனர் என்பதை அறிய முடியும். இன்னும் ஓரிரு நாட்களில், தேவசம்போர்டும் கேரள காவல்துறையின் தகவல் தொடர்பு வல்லுனர்கள் குழுவும் கூடி இதை முடிவு செய்வார்கள். இதற்காக விழிப்புணர்வு பிரசாரம் செய்யப்படும். பின்னர், அனைத்து மாநிலங்களிலும், இது பற்றி விழிப்புணர்வு பிரசாரம் நடத்தப்படும்.
சபரிமலை பயணம் முன்பதிவு கட்டாயம் என்பது உடனடியாக அமலுக்கு வராவிட்டாலும், நாளடைவில் அது கட்டாயமாக்கப்படும். முன்பதிவு செய்தவர்கள் குறிப்பிட்ட நேரத்தில் வர இயலாவிட்டால் அவர்கள் என்ன செய்யலாம் என்பது பற்றியும் ஆலோசிக்கப்படும். சபரிமலை முன்பதிவுக்காக கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது. உச்ச நீதிமன்ற தீர்ப்பு உள்ளதால், முன்பு போல, பம்பையில் பெண்களை தடுக்க, தேவசம்போர்டு ஊழியர்களை நியமிக்க முடியாது.” என்று கூறினார்.