கடந்த 4-ம் தேதி வெளியாகிய ‘அசுரன்’ திரைப்படம் விமர்சன ரீதியாக ரசிகர்களிடம் மாபெரும் வெற்றியைப் பெற்று வருகிறது. தற்போது வசூல் ரீதியாகவும் சாதனை படைத்திருக்கிறது.
”பொல்லாதவன், ஆடுகளம், வட சென்னை” ஆகியப் படங்களுக்குப் பிறகு தனுஷ் – வெற்றிமாறன் கூட்டணியில் 4-வது படமாக வெளியானது “அசுரன்’. எழுத்தாளர் பூமணி 40 ஆண்டுகளுக்கு முன்பு எழுதிய வெக்கை என்ற நாவலின் கதை தான் அசுரனாக திரையில் பாய்ந்தது. நிலத்தை களமாகக் கொண்ட இந்தக் கதையில், தனுஷ், மஞ்சு வாரியர், பசுபதி, கென் கருணாஸ், டீஜே அருணாச்சலம், ஆடுகளம் நரேன் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.
இதனை வி கிரியேஷன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்க, அசுரன் படத்திற்கு இசையமைத்திருந்தார் ஜி.வி.பிரகாஷ். தீண்டாமை உள்ளிட்ட அடக்குமுறைக்கு எதிராக பேசிய இப்படம் சமூக வலைதளங்களில் விவாதக் களமாக மாறியது. தவிர, தனுஷின் அசுரத் தனமான நடிப்பும், ஜி.வி.யின் வெறித்தனமான பின்னணி இசையும் படத்திற்கு வலு சேர்த்தன.
இந்நிலையில் அசுரன் திரைப்படம் பாக்ஸ் ஆஃபிஸில் 100 கோடி வசூல் செய்திருப்பதாக திரைப்பட விமர்சகர்கள் பலர், படக்குழுவினருக்கு ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அசுரனின் பாக்ஸ் ஆபிஸ் குறித்த தகவல்கள் அறிந்ததும் இந்த வெற்றியை பெரியளவில் கொண்டாட முடிவெடுத்திருக்கிறார் தயாரிப்பாளர் எஸ்.தாணு.
2002-ம் ஆண்டில் ”துள்ளுவதோ இளமை” படத்தில் அறிமுகமான தனுஷ், தொடர்ந்து 17 வருடங்களாக பல வெற்றிப் படங்களை கொடுத்திருந்தாலும் 100 கோடி கிளப்பில் இதுவரை அவரது படங்கள் இடம்பெறாமல் இருந்தது. அந்தக் குறையை ‘அசுரன்’ தீர்த்து வைத்திருக்கிறான். நல்ல கதை எப்படியும் மக்களிடம் வெற்றியடைந்துவிடும் என்பதற்கு இந்தப் படம் மிகச்சிறந்த உதாரணமாக விளங்குகிறது!