இந்திய கிரிக்கெட் வீரர் மணீஷ் பாண்டே ஐ.பி.எல் போட்டிகளின் மூலம் பிரகாசிக்கத் தொடங்கிய பிரபல கிரிக்கெட் வீரர்களில் முக்கியமானவர். பின்னர் தேசிய அணிக்காகவும் விளையாடினார். தற்போது தான் கர்நாடகாவை வழிநடத்தும் விஜய் ஹசாரே கோப்பையில் கவனம் செலுத்தி வருகிறார்.
இந்நிலையில் தன் வாழ்க்கையின் அடுத்த இன்னிங்ஸை தொடங்கவிருக்கிறார் மணீஷ். ஆம்! 30 வயதாகும் இவர் திருமணத்துக்கு தயாராகிவிட்டார். நடிகை அஷ்ரிதா ஷெட்டியை மும்பையில் மணக்கிறார் மணீஷ். இரண்டு நாள் நிகழ்ச்சியாக இந்தத் திருமணம் டிசம்பர் 2 ஆம் தேதி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கான தனிப்பட்ட நிகழ்வில், சில இந்திய கிரிக்கெட் வீரர்களும் பங்கேற்க இருக்கிறார்கள். அஷ்ரிதாவுடனான தனது காதல் விவகாரத்தை மணீஷ் வெற்றிகரமாக ரகசியமாக வைத்திருந்தார் என அவர்களுக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்துள்ளனர்.
மணீஷ் இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ் மேன். நடிகர் சித்தார்த்துடன் ‘உதயம் என்.ஹெச்.4’ படத்தில் அறிமுகமான அஷ்ரிதா, ’ஒரு கன்னியும் 3 களவாணியும்’, ‘ இந்திரஜித்’ ஆகியப் படங்களில் நடித்திருக்கிறார்.