குடியுரிமை திருத்த சட்டத்திற்கு வடகிழக்கு மாநிலங்களான அசாம், திரிபுரா மற்றும் மேகாலயாவில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதனை எதிர்த்து மக்கள் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
டெல்லியில் ஜாமியா மில்லியா இஸ்லாமிய பல்கலைக்கழகம், குரு கோபிந்த் சிங் இந்திரபிரஸ்தா பல்கலைக்கழக மாணவ-மாணவியர்களும் மற்றும் உத்தரபிரதேசத்தில் அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தின் மாணவர்களும் போராட்டத்தில் குதித்தனர். இதேபோன்று டெல்லி சீலாம்பூர், ஜாபராபாத்திலும் போராட்டம் நடந்தது.
இந்நிலையில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக லால் குயிலாவில் இருந்து ஷாகீத் பகத் சிங் பூங்கா நோக்கி காலை 11.30 மணியளவில் பேரணி நடைபெற முடிவாகியுள்ளது. எனினும், இதற்கு போலீசார் அனுமதி வழங்கவில்லை.
இதேபோன்று மாண்டி ஹவுஸ் பகுதியில் இருந்து ஜந்தர் மந்தர் நோக்கி இன்று மதியம் 12 மணியளவில் எதிர்ப்பு பேரணி நடத்துவதற்கு கம்யூனிஸ்டு கட்சி முடிவு செய்துள்ளது. இதற்கும் போலீசாரின் அனுமதி வழங்கப்படவில்லை.
இந்நிலையில், டெல்லி செங்கோட்டை பகுதியருகே 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. போலீசாரின் இந்த உத்தரவின்படி, 4 பேருக்கு மேல் ஒரே இடத்தில் கூடுவது தடை செய்யப்படுகிறது.