Home செய்திகள் ஜெயலலிதாவின் நினைவு மண்டபம் விரைவில் திறக்கப்படுகிறது

ஜெயலலிதாவின் நினைவு மண்டபம் விரைவில் திறக்கப்படுகிறது

53
0

முதல்-அமைச்சர் ஜெயலலிதா கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 5-ந் தேதி உயிரிழந்தார். அவரது உடல் சென்னை மெரினா கடற்கரை ஓரத்தில் எம்.ஜி.ஆர். சமாதி அருகே அடக்கம் செய்யப்பட்டது.

ஜெயலலிதாவின் நினைவு மண்டபம் கட்டுவதற்காக ரூ.50.80 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. இதற்கான கட்டுமான பணியை கடந்த 2018-ம் ஆண்டு மே மாதம் 8-ந் தேதி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் தொடங்கி வைத்தனர்.

ஜெயலலிதா நினைவு மண்டபம் மற்றும் அதனை சார்ந்த கட்டமைப்புகள் சுமார் 50 ஆயிரத்து 422 சதுர அடி பரப்பளவில் அமைக்கப்பட உள்ளது. இந்த நினைவிடத்தில் பீனிக்ஸ் பறவை வடிவமைப்பில் நினைவு சின்னம், அருங்காட்சியகம், அறிவுத்திறன் பூங்கா, கருங்கல்லால் ஆன நடைபாதை வசதி, புல்வெளி மற்றும் நீர்தடாகங்கள், சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டு வருகிறது. ராட்சத கிரேன்கள், கலவை எந்திரங்கள் உதவியுடன் தீவிரமாக பணிகள் நடந்து வருகிறது.

பீனிக்ஸ் பறவை இறக்கை மாதிரி அமைக்கும் கடினமான பணி நடந்து வருகிறது. இது சவாலான பணி என்பதால் துபாயில் இருந்து கட்டிடக்கலை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் கொடுத்துள்ள ஆலோசனைப்படி பணிகள் துரிதமாக நடந்து வருகிறது.

ஜெயலலிதாவின் நினைவு மண்டபம் அருகே இரும்பு தகரத்தினால் பாதுகாப்பு வளையம் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் ஜெயலலிதாவின் சமாதியை, எம்.ஜி.ஆர். நினைவு மண்டபம் அருகே இருந்தபடி பார்க்க வசதி செய்யப்பட்டுள்ளது. தற்போதைய நிலையில் 90 சதவீதம் பணிகள் நிறைவடைந்து உள்ளன.

Advertisements

Leave a Reply