சிவகாசி அருகே உள்ள கிராமம் கொங்கலாபுரம். இங்கு வசித்து வருபவர் சுந்தரம். இவர் ஒரு கட்டிட தொழிலாளி. இவரது 8 வயது மகள் சுவாதி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) இவள் அதே பகுதியில் உள்ள பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வந்தாள்.
சாயங்கால நேரங்களில் ஸ்கூல் முடிந்ததும், சுவாதி அப்பா வேலை செய்யும் இடத்துக்கு சென்றுவிடுவாள். அதன்பிறகு சுந்தரம் மகளை தூக்கி கொண்டு வீட்டுக்கு வந்து சேருவார். அப்படித்தான், சுவாதி நேற்று ஸ்கூல் முடிந்து வருவாள் என்று தந்தை காத்து கொண்டே இருந்தார். ஆனால் குழந்தை வரவே இல்லை. ஆனால் ஸ்கூலில் இருந்து கிளம்பும்போது அப்பாவை பார்ப்பதாக சொல்லிவிட்டுதான் கிளம்பினாளாம். வீட்டுக்கும் போகவில்லை.
அதனால் பயந்துபோன சுந்தரம் மகளை பல இடங்களில் தேடினார். எங்குமே சுவாதி கிடைக்கவில்லை. அதனால் நேற்றிரவு சிவகாசி டவுன் போலீசில் புகார் செய்தார். போலீசாரும் குழந்தையை தேடும் பணியில் ஈடுபட்டனர். இந்த நிலையில் இன்று காலை, சித்துராஜபுரம் என்ற காட்டுப்பகுதியில் சிறுமியின் சடலம் கிடப்பதாக போலீசுக்கு தகவல் கிடைக்கவும், அங்கு விரைந்தனர். அது காணாமல் போன சுவாதிதான்.
உடம்பெல்லாம் காயங்களுடன் பிணமாக கிடந்தாள். வாயில் பஞ்சை வைத்து அடைத்துள்ளனர் குரூர்கள். மர்ம நபர்கள் குழந்தையை பாலியல் பலாத்காரம் செய்து, அதன்பிறகு கொடூரமாக கொன்று நடுக்காட்டில் வீசிவிட்டு போயுள்ளதாக முதல்கட்டமாக தெரியவந்துள்ளது.
உடலை மீட்ட போலீசார் போஸ்ட் மார்ட்டம் செய்ய அனுப்பி வைத்தனர். 8 வயது குழந்தையை யார் கடத்தினார்கள். காட்டுப்பக்கம் தூக்கி சென்று சீரழித்தார்கள் என்று தெரியவில்லை. இது சம்பந்தமான விசாரணையை போலீசார் முடுக்கி விட்டுள்ளனர் என்றாலும் சுவாதியின் மரணம் சிவகாசி மக்களை நிலைகுலைய வைத்துள்ளது.