Home செய்திகள் பட்டாசு விபத்து: நாடு முழுவதும் 5 பேர் பலி ; ரூ.50 லட்சம் இழப்பு

பட்டாசு விபத்து: நாடு முழுவதும் 5 பேர் பலி ; ரூ.50 லட்சம் இழப்பு

245
0

நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை நேற்று உற்சாகமுடன் கொண்டாடப்பட்டது. நாட்டு மக்கள் அதிகாலையில் குளித்து, சாமி கும்பிட்டு, புது ஆடைகளை உடுத்தி பலகாரங்களை பகிர்ந்து உண்டனர்.

தீபாவளி பண்டிகையின் முக்கிய அம்சம் என கூறப்படும் பட்டாசு வெடிப்பதில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வித்தியாசமின்றி அனைவரும் ஆர்வமுடன் இருந்தனர்.

இந்த முறை சுற்றுச்சூழலுக்கு அதிக அளவு பாதிப்பு ஏற்படுத்துவதில்லை என்ற வகையில் பசுமை பட்டாசுகளை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. இவற்றை மக்கள் விரும்பி வாங்கி சென்று வெடித்தனர்.

எனினும், சில இடங்களில் சரியாக விதிகளை பின்பற்றாமல் பட்டாசுகளை வெடித்ததில் பல்வேறு தீக்காய சம்பவங்கள் நடந்தன.

தெலுங்கானாவில் நேற்று பட்டாசு வெடித்ததில் 44 பேருக்கு கண்களில் காயம் ஏற்பட்டது. அவர்கள் சரோஜினி தேவி கண் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.

மேற்கு வங்காளத்தின் கொல்கத்தா நகரில் பட்டாசுகள் வெடித்ததில் 5 வயது சிறுவன் உள்பட 2 பேர் வெவ்வேறு சம்பவங்களில் உயிரிழந்தனர்.

ஹரிதேவ்பூர் பகுதியில் புஸ்வாணம் வெடித்ததில் ஆதி தாஸ் என்ற சிறுவன் பலியானான். இதேபோன்று நகரின் கிழக்கே கஸ்பா பகுதியில் தீப் குமார் கோலே (வயது 40) என்பவர் புஸ்வாணம் வெடித்ததில் பலியாகி உள்ளார்.

டெல்லியில் பட்டாசுகள் வெடித்ததில் ஏற்பட்ட தீ விபத்து சம்பவங்கள் உள்பட 200க்கும் மேற்பட்ட தொலைபேசி அழைப்புகள் டெல்லி தீயணைப்பு துறைக்கு வந்துள்ளன.

டெல்லி சதர் பஜார் சந்தை பகுதியில் உள்ள கடை ஒன்றில் பெரிய அளவில் தீ விபத்து ஒன்றும் ஏற்பட்டு உள்ளது. கட்டிடம் ஒன்றில் 4வது மற்றும் 5வது தளத்தில் அமைந்த கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் அங்கிருந்த பிளாஸ்டிக் பொம்மைகள் உள்ளிட்ட பொருட்கள் தீயில் எரிந்தன.

டெல்லி ஜகத்புரி பகுதியில் வீட்டின் குளியலறை மற்றும் கழிவறைக்கு தேவையான பொருட்களை விற்பனை செய்யும் கடை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தினை அடுத்து 6 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு சென்று ஒரு மணிநேரம் போராடி தீயை கட்டுப்படுத்தின. இந்த சம்பவங்களில் யாருக்கும் காயமோ அல்லது உயிரிழப்புகளோ ஏற்படவில்லை.

ஒடிசாவின் சம்பல்பூர் நகரில் கோல்பஜார் பகுதியில் காய்கறி சந்தை ஒன்று உள்ளது. இங்கு நள்ளிரவில் ஏற்பட்ட தீ விபத்தில் 70க்கும் கூடுதலான கடைகள் எரிந்து போயுள்ளன. தீயணைப்பு வாகனங்கள் சம்பவ பகுதிக்கு உடனடியாக சென்று 2 மணிநேர போராட்டத்திற்கு பின் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தன.

இதுபோன்று மத்திய பிரதேசத்தில் மற்றொரு சம்பவத்தில் 3 தளங்கள் கொண்ட கட்டிடம் ஒன்றில் பெரிய அளவில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் அங்கிருந்த துணி கடை மற்றும் குடியிருப்பு ஆகியவை தீப்பிடித்து எரிந்தது. இதில் கடையில் இருந்த துணிகள் எரிந்து விட்டன. கடை உரிமையாளரான கிர்தாரி கோயல் (வயது 50) என்பவர் காயமடைந்து உள்ளார்.

5 தீயணைப்பு வாகனங்கள் போராடி 6 மணிநேரத்திற்கு பின் தீயை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளன. இதில் ரூ.50 லட்சம் மதிப்பிலான துணிகள் எரிந்து போயுள்ளன என முதற்கட்டத்தில் கிடைத்த தகவல் தெரிவிக்கின்றது.

Advertisements

Leave a Reply