தமிழக அரசு ஆலோசனை!
தமிழகத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் சென்னையில் நடைபெற்றது.
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது. இந்தநிலையில், சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், தலைமைச் செயலாளர் சண்முகம், சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் மற்றும் உயரதிகாரிகள் கலந்துகொண்ட ஆலோசனைக் கூட்டம் தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.
இதில், தமிழகம் முழுவதும் எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. இந்தக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர்கள் காணொலிக் காட்சி மூலம் கலந்துகொண்டனர். அவர்களுக்கு கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விளக்கப்பட்டது. அதேபோல், சட்டப்பேரவைக்கு வந்த உறுப்பினர்களுக்கு இன்ஃப்ராரெட் தெர்மா மீட்டர் மூலம் உடல்வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்ட பின்னரே அனுமதிக்கப்பட்டனர். மேலும், சானிடைசர் மூலம் கைகளைச் சுத்தம் செய்தபிறகு உள்ளே செல்லுமாறும் எம்.எல்.ஏ-க்கள் அறிவுறுத்தப்பட்டனர். சட்டப்பேரவைக்கு வந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும் உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்பட்டது. சோதனைக்குப் பின்னர் அங்கிருந்த செவிலியரிடம் தனது உடல்வெப்பநிலை குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி கேட்டறிந்தார்.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு 206 ஆக உயர்வு!
இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 206 ஆக உயர்ந்திருக்கிறது.
இதுதொடர்பாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் 14,376 மாதிரிகள் சோதிக்கப்பட்டதில் 206 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் புதிதாக 4 பேருக்கு தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் பக்தர்கள் செல்லும் வழிகள் அடைக்கப்பட்டு, பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதையடுத்து, கோயிலுக்கு தரிசனம் செய்ய வந்த சில பக்தர்களும் கோயில் வாசலில் நின்று வழிபட்டுச் சென்றனர்.
-Credits vikatan