Home செய்திகள் சென்னையில் 100 மின்சார ஆட்டோக்கள்

சென்னையில் 100 மின்சார ஆட்டோக்கள்

158
0

வெளிநாடுவாழ் தமிழர்கள் மற்றும் பிற முதலீட்டாளர்களிடமிருந்து தமிழ்நாட்டிற்கு அதிக அளவில் முதலீடுகளைப் ஈர்க்கவும், நவீன தொழில்நுட்பங்களை அறிந்து, அவற்றை தமிழ்நாட்டில் செயல்படுத்தவும், இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் துபாய்க்கு முதல்-அமைச்சர் தலைமையில் அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் குழுவினர் கடந்த ஆகஸ்டு 28-ந் தேதி முதல் செப்டம்பர் 10-ந் தேதி வரை அரசு முறை பயணம் மேற்கொண்டனர்.

அப்போது 8,835 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான முதலீடுகளை ஈர்த்து, 35 ஆயிரத்து 520-க்கும் மேற்பட்டோருக்கு புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் 41 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொண்டனர்.

இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தை செயல்படுத்தும் விதமாக எம் ஆட்டோ எலக்ட்ரிக் மொபிலிட்டி நிறுவனத்தால் பெட்ரோல் ஆட்டோக்கள், சுற்றுச்சூழலுக்கு மாசு விளைவிக்காத மின்சாரத்தில் இயங்கும் ஆட்டோக்களாக மாற்றியமைக்கப்பட்டன.

முதற்கட்டமாக சென்னையில் 100 எம்-மின்சார ஆட்டோக்களை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக தொடக்கி வைக்கும் அடையாளமாக, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று 4 எம்-மின்சார ஆட்டோக்களை கொடியசைத்து தொடக்கி வைத்தார்.

இந்த எம்-மின்சார ஆட்டோக்களை ஒருமுறை முழுமையாக மின்னேற்றம் (சார்ஜ்) செய்வதன் மூலம் சுமார் 100 கி.மீ. தூரம் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த ஆட்டோக்களில் சி.சி.டி.வி. கேமரா, ஜி.பி.எஸ். வசதி, ஆபத்து பொத்தான் போன்ற வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இந்த ஆட்டோக்களை எம் ஆட்டோ பிரைட் என்ற செல்போன் செயலி மூலம் பொதுமக்கள் முன்பதிவு செய்து கொள்ள முடியும். பெரும்பான்மையான எம்-மின்சார ஆட்டோக்களை பெண்கள் மற்றும் திருநங்கையர் ஓட்டுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

எம் ஆட்டோக்களை புதிதாக வாங்க வேண்டும் என்றால் ஒன்றின் விலை சுமார் ரூ.2.50 லட்சம் வரை விற்பனை செய்யப்படுகிறது. ஏற்கனவே பெட்ரோலில் இயங்கும் ஆட்டோ இருக்கும் பட்சத்தில் அதை மின்சார ஆட்டோவாக மாற்ற வேண்டும் என்றால் ரூ.1.20 லட்சம் செலவாகிறது என்று கூறப்படுகிறது.

Advertisements

Leave a Reply