Home சினிமா “ரெய்டு இல்லாத அமைதியான வாழ்க்கை; நண்பர் அஜித் காஸ்ட்யூம்…” – விஜய் என்ன பேசினார்?

“ரெய்டு இல்லாத அமைதியான வாழ்க்கை; நண்பர் அஜித் காஸ்ட்யூம்…” – விஜய் என்ன பேசினார்?

416
0

`மாஸ்டர்’ பட ஆடியோ லாஞ்ச் விழாவில் நடிகர் விஜய்யின் பேச்சு!

விஜய்யின் புதுப்பட ரிலீஸ் அன்று அதிகாலை காட்சிக்கு ரசிகர்கள் மத்தியில் எந்த அளவுக்கு ஆர்வமும் எதிர்பார்ப்பும் இருக்குமோ அதே அளவுக்கான ஆர்வமும் எதிர்பார்ப்பும் கடந்த சில வருடங்களாக விஜய்யின் மேடைப் பேச்சுக்கும் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், இரண்டு நாள்களுக்கு முன்பாக ரஜினிகாந்த் அரசியல் பேசிவிட்டுச் சென்ற அதே லீலா பேலஸில் இன்று `மாஸ்டர்’ ஆடியோ லாஞ்ச் நடைபெறுகிறது. வருமான வரித்துறை கெடுபிடி அதைச்சுற்றிய அரசியல் விவாதம் என நெருக்கடிக்குள்ளான விஜய் இந்த முறை ஆடியோ லாஞ்ச்சில் என்ன பேசப்போகிறார் என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

விழா சரியாக 3 மணிக்கெல்லாம் தொடங்கியது என்றாலும், `பிகில்’ பட ஆடியோ வெளியீட்டு விழாவைப்போல் இல்லாமல் இந்த முறை செய்தியாளர்கள் மற்றும் ரசிகர்களை விழா அரங்குக்குள் நுழைவதற்குத் தடை விதிக்கப்பட்டிருந்தது. இதனால் அவர்கள் வாசலிலேயே காத்திருந்தனர். திடீரென அங்கு இருந்தவர்களும் ரசிகர்களும் விழா அரங்குக்குள் நுழையக்கோரி வாக்குவாதம் நடந்தது.

பின்னர், சிறிதுநேரத்தில் பவுன்சர்களை மீறி ரசிகர்கள் ஹோட்டலில் நுழைந்தனர். ஹோட்டல் முன்பு கூடிய அவர்கள், நடிகர் விஜய் வெளியே வர வேண்டும் எனக் கோஷமிட்டதுடன் வாசலில் அமர்ந்து திடீரென போராட்டம் நடத்த தொடங்கினர்.

இதற்கிடையே, விழாவுக்கு கோட் சூட் சகிதமாக விஜய் வந்திறங்கியது, மேடையில் தாய் தந்தையைக் கட்டியணைத்தது போன்ற புகைப்படங்கள் சிறிதுநேரத்திலேயே இணையத்தில் வைரலாகின.

இதற்கிடையே, மைக் பிடித்த விஜய், “இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ரசிகர்கள் வர முடியாமல் வருத்தப்படுற அதே வருத்தம் எனக்கும் இருக்கு. அதுக்கு முக்கிய காரணம், போன ஆடியோ வெளியீட்டு விழாவில் ஆடிட்டோரியத்துக்கு வெளியில் நடந்த சில விஷயங்கள்தான். மறுபடியும் அதேபோல் நடக்கக் கூடாதுன்னு நினைச்சேன். இந்த விழாவுல ரசிகர்கள் பங்கேற்க முடியாது என்பதை அரை மனசோடுதான் ஒத்துக்கிட்டேன். இதுக்காக ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுகிறேன். எல்லா சாங் ரெக்கார்டிங் பின்னாடியும் ஒரு குட்டி ஸ்டோரி இருக்கு. அனிருத்தும் அருண்ராஜா காமராஜும் செஞ்சுட்டாங்க. படத்துக்கு படம் அனிருத் ஷார்ப்பாகி போயிகிட்டே இருக்காரு.

தமிழ் சினிமாவுல ஒரு தவிர்க்க முடியாத ஆளாக வளர்ந்துகிட்டு வர்றார் விஜய் சேதுபதி. அவர் நினைத்திருந்தால் இந்தப் படத்தில் நடிப்பதை தவிர்த்திருக்கலாம். நிறைய நெகட்டிவ் ஷேட்ஸ் உள்ள நல்ல ரோல் அவருக்கு இதுல. ஆனால், எதுக்கு இந்த ஸ்கிரிப்ட்டுக்கு ஒத்துக்கிட்டீங்கன்னு ஒருநாள் அவர்கிட்ட கேட்டேன். “எனக்கு உங்களை ரொம்பப் பிடிக்கும் அவ்வளவுதான்னு” நாலே வரியில சிரிச்சுகிட்டே ஆஃப் பண்ணிட்டாரு. அப்போதான் தெரிஞ்சது, அவரு பேருல மட்டும் இடம் கொடுக்கல. மனசுலயும் குடுத்துகிட்டு இருக்காரு. எல்லா ஹீரோயின்களுக்கும் ஒரு ப்ளஸ் இருக்கும். மாளவிகாவுக்கு தமிழ் சினிமாவுக்கு ஏத்த மாதிரி நல்ல அழகான முகம். அவங்க தமிழ் மட்டும் கத்துக்கிட்டா தமிழ் சினிமாவுல பெரிய நடிகையா ரொம்ப சீக்கிரமாக வருவாங்க. ஆண்ட்ரியா இன்னும் நிறைய தமிழ் படங்கள் பண்ணணும்.

லோகேஷ் கனகராஜ் மாநகரம்' மூலமா திரும்பிப் பார்க்க வச்சாரு.கைதி’ பட மூலமா திரும்ப திரும்ப பார்க்க வச்சாரு. மாஸ்டர் மூலமா என்ன பண்ண போறாருன்னு பாக்குறதுக்கு நானும் வெயிட் பண்ணுறேன். லோகேஷ் ஒரு ஆச்சர்யம்தான். லோகேஷ் கிட்ட ஸ்கிரிப்ட் பேப்பரே இருக்காது. அவங்க டீம்ல யாருகிட்டேயும் இருக்காது. சார் இப்படி பண்ணுவீங்க, இப்படி பேசுவீங்கனு மட்டும் சொன்னாங்க. ஸ்கிரிப்ட் பேப்பரே கொடுக்க மாட்டேங்கிறானே, எப்படி இவனோடு மூணு மாசம்னு நானும் யோசிச்சேன். முதல் 3 நாள் வெறியாகி மன உளைச்சலுக்கு ஆளாகி அவன்கிட்ட சொல்லிட்டேன். மறுநாள் ஸ்கிரிப்ட் பேப்பர் வந்துருச்சு. அடுத்து தினமும் காலைல வந்த உடனே சார் ஸ்கிரிப்ட்டுனு பேப்பரை நீட்டுவான். நம்மள கலாய்க்கிறானோ என நான் நினைப்பேன். ஹார்ட் வொர்க் ஸ்மார்ட் வொர்க்கும் சேர்த்து பண்ணுனா வெற்றி நிச்சயங்கிறதுக்கு லோகேஷ் ஒரு உதாரணம்” என்றவர், கடைசியாக ரசிகர்களுக்கு குட்டி ஸ்டோரி ஒன்றை சொல்ல ஆரம்பித்தார்.

“இதைக் கதைன்னு சொல்ல முடியாது. நீங்க எப்படி வேணும்னாலும் எடுத்துக்கிடலாம். என் படத்தின் பாட்டு `எல்லா புகழும் ஒருவனுக்கே, நீ நதி போல ஓடிக்கொண்டிரு’னு வரும். கிட்டத்தட்ட எல்லோருக்கும் வாழ்க்கை நதி மாதிரிதான். அப்போ ஒரு இடத்துல சிலர் நம்மள வணங்குவாங்க… நதி போயிகிட்டே இருக்கும். இன்னொரு இடத்துல நிறைய பேர் பூ தூவி நம்மள வரவேற்பாங்க… நதி போயிகிட்டே இருக்கும். இன்னும் சிலரோ நம்மள பிடிக்காதவங்க கல்லும் எறிவாங்க. நம்ம நம்ம வேலையை, கடமையை செஞ்சுகிட்டு நதி மாதிரி போயிட்டே இருக்கணும். வெற்றியாலே அவங்களை கொல்லணும். சிரிப்பாலயே அவங்கள கொல்லணும். உண்மையாக இருக்கணும்னா சில நேரத்துல ஊமையாக இருக்கணும்” என்றார்.

அப்போது, டிரஸ் குறித்து தொகுப்பாளர்கள் கேள்வி எழுப்ப, ஒவ்வொரு தடவையும் ரொம்ப மோசமா டிரஸ் பண்ணிகிட்டு வரேன்னு காஸ்ட்யூம் டிசைனர் இதைக் கொடுத்தாங்க. நானும் ஓகே இந்த டைம் `நண்பர் அஜித்' மாதிரி ஸ்டைலா கோட் சூட் போட்டு வரலாம்ன்னு நினைச்சேன். நல்லா இருக்கா" என்றார். தமிழ்நாட்டுல தமிழ் மக்களுக்கு பிரச்னைன்னா நீங்க முதல் ஆளாகக் குரல் கொடுக்குறீங்க என்று நெய்வேலி சம்பவத்தை ஞாபகப்படுத்த, ரசிகர்களை நோக்கி,நீங்க வேற லெவல்” என்றார். இதைத்தொடர்ந்து நிகழ்ச்சித் தொகுப்பாளர் விஜய்யிடம் 20 வருடத்துக்கு முன்பு வாழ்ந்த விஜய்யிடம் ஒரு கேள்வி கேட்க வேண்டுமென்றால் என்ன கேட்பீர்கள்?" என்று கேட்க, அப்போ வாழ்ந்துகிட்டு இருந்த வாழ்க்கையைத் திருப்பிக் கேட்பேன். ரெய்டு எல்லாம் இல்லாத அந்த அமைதியான வாழ்க்கை வேண்டும் என்று கேட்பேன். இப்போவும் ஒண்ணும் பிரச்னை இல்லை. ஜாலியாகத்தான் இருக்கேன்” என்று பேசி முடித்தார்.

 

Credits Vikatan

Advertisements

Leave a Reply