Home செய்திகள் சிறப்பு வகுப்பு, மாலை சிற்றுண்டி மட்டுமல்ல; மாணவர்களுக்கு இரவு உணவும் கொடுக்கும் கடலூர் அரசுப் பள்ளி

சிறப்பு வகுப்பு, மாலை சிற்றுண்டி மட்டுமல்ல; மாணவர்களுக்கு இரவு உணவும் கொடுக்கும் கடலூர் அரசுப் பள்ளி

103
0

ஒரு சில ஆசிரியர்களின் அர்ப்பணிப்பினால் தனியார் பள்ளிகளுக்கு சவால் விட்டுக்கொண்டிருக்கின்றன அரசுப் பள்ளிகள். அப்படிப்பட்ட பள்ளிகளில் ஒன்றுதான், கடலூர் மாவட்டம், சி.முட்லூரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளி.

தனியார் பள்ளிகள் அசுர வளர்ச்சியைப் பெற்றுவரும் வேளையில்தான், `மாணவர்கள் வரவில்லை என்ற காரணத்துடன் அரசுப் பள்ளிகளை மூடுவதில் முனைப்புக்காட்டி வருகிறது தமிழக அரசு’ என்ற குற்றச்சாட்டும் வலுவாக முன்வைக்கப்படுகிறது. அதேநேரம், ஒரு சில ஆசிரியர்களின் அர்ப்பணிப்பினால் தனியார் பள்ளிகளுக்கு சவால் விட்டுக்கொண்டிருக்கின்றன அரசுப் பள்ளிகள். அப்படிப்பட்ட பள்ளிகளில் ஒன்றுதான், கடலூர் மாவட்டம், சி.முட்லூரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளி.

அனைத்து மாணவர்களுக்கும் மாலை 4.30 மணிக்கு பள்ளி நேரம் முடிந்ததும், தனியார் பள்ளிகளைப் போன்று சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுகின்றன. அப்போது, அன்றைக்கு எடுக்கப்பட்ட பாடங்களில் மாணவர்கள் எழுப்பும் சந்தேகங்களை உடனுக்குடன் தெளிவுபடுத்துகிறார்கள் ஆசிரியர்கள். 6,7,8,9 மற்றும் +1 வகுப்புகளுக்கு, 5.45 மணி வரை வகுப்புகள் நடத்தப்படுகின்றன. அதேபோல, பொதுத்தேர்வெழுதும் 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு, இரவு 8 மணி வரை சிறப்பு வகுப்புகள், பயிற்சித் தேர்வுகள் நடத்தப்படுகின்றன.

இவை அனைத்தையும் தனது சுய விருப்பத்திலும், சொந்தப் பணத்திலும் செய்துவரும் தலைமை ஆசிரியர் மணிவாசகத்தை சந்திக்கச் சென்றோம். தலைமை ஆசிரியரின் அறை உடல்நிலை சரியில்லாத மாணவர்களின் ஓய்வு அறையாக மாற்றப்பட்டிருந்ததால், மரத்தடியில் அமர்ந்து அலுவல் பணியைப் பார்த்துக்கொண்டிருந்தவரிடம் பேசினோம். “என் சம்பளத்தில் ஒரு சிறு பகுதியை மாணவர்களுக்காகவும், அவர்களின் எதிர்காலத்திற்காகவும் செலவுசெய்கிறேன் அவ்வளவுதான். மாணவர்களின் கல்வி மட்டுமல்ல அவர்களின் எதிர்காலமும் ஆசிரியர்கள் கையில்தான் இருக்கிறது. மாணவர்களுக்கு படிக்கத் தெரிந்தால் மட்டும் போதுமென்று நினைக்கிறது கல்வித்துறை.

ஆனால், தமிழோ, ஆங்கிலமோ ஆசிரியர்கள் வாயால் சொல்வதை மாணவர்கள் புரிந்துகொண்டு எழுதும்போதுதான் அங்கு உண்மையான கற்றல் தொடங்குகிறது. கடந்த 2018-ம் ஆண்டு, இந்தப் பள்ளிக்கு நான் தலைமையாசிரியராகப் பொறுப்பேற்றதும், 6 முதல் 9-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு மட்டும் பொதுவான எழுத்துத் தேர்வு ஒன்றை வைத்தேன். அதில் 90% மாணவர்கள் எழுதுவதிலும், படிப்பதிலுமே பின் தங்கியிருந்தனர். அதன் விளைவுதான் இந்தச் சிறப்பு வகுப்புகள். சிறப்பு வகுப்புகளுக்கு ஆசிரியர்களை நான் கட்டாயப்படுத்துவதில்லை.

எங்கள் மாணவர்களுக்கு நாங்கள் செய்துகொடுக்கும் சலுகைகளைப் பார்த்து, தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களும் எங்கள் பள்ளியை நோக்கி வர ஆரம்பித்திருக்கிறார்கள். சரியாகப் படிக்கவில்லை என்று தனியார் பள்ளிகளிலிருந்து வெளியேற்றப்பட்ட நான்கு மாணவர்கள், இப்போது எங்கள் பள்ளியில் 100 மதிப்பெண்கள் எடுக்கிறார்கள்” என்றார்.

Credits Vikatan

Advertisements

Leave a Reply