Home விளையாட்டு கிரிக்கெட் “ஆண்டுக்கு 300 நாட்களை கிரிக்கெட்டுக்காக செலவிடுகிறேன்” கோலி பேட்டி

“ஆண்டுக்கு 300 நாட்களை கிரிக்கெட்டுக்காக செலவிடுகிறேன்” கோலி பேட்டி

52
0

நியூசிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியையொட்டி இந்திய கேப்டன் விராட் கோலி நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம், ‘இந்தியாவில் 2021-ம் ஆண்டு நடக்கும் 20 ஓவர் கோப்பை போட்டி முடிந்ததும் ஏதாவது ஒரு வடிவிலான போட்டியை துறக்கும் எண்ணம் உள்ளதா?’ என்று கேட்கப்பட்டது.

அதற்கு கோலி பதில் அளிக்கும் போது, ‘அடுத்த 3 ஆண்டுகளில் கடினமான மிகப்பெரிய போட்டிகள் உள்ளன. அதற்கு இப்போதிலிருந்தே என்னை தயார்படுத்திக் கொள்கிறேன். அதன் பிறகு நான் வேறு விதமாக சிந்திக்கலாம்’ என்று பதில் அளித்தார்.

8-9 ஆண்டுகள் மூன்று வடிவிலான போட்டிகளிலும் தொடர்ந்து விளையாடி வருகிறேன். கிரிக்கெட், பயிற்சிகள், அதற்குரிய பயணம் என்று ஆண்டுக்கு கிட்டத்தட்ட 300 நாட்களை மைதானத்தில் செலவிடுகிறேன். எல்லா நேரமும் வேகமும், தீவிரமும் இருப்பதால் உடல் அளவில் பாதிப்பை ஏற்படுத்தத்தான் செய்கின்றன. இது குறித்து வீரர்களும் யோசிக்காமல் இல்லை.

தொடர்ச்சியான போட்டி அட்டவணை வீரர்களுக்கு ஓய்வு அளிக்க அனுமதிக்காது என்ற போதிலும் கூட தனிப்பட்ட முறையில் நாங்கள் ஓய்வு எடுத்துக் கொள்கிறோம். குறிப்பாக மூன்று வடிவிலான போட்டிகளிலும் (டெஸ்ட், ஒரு நாள் மற்றும் 20 ஓவர் போட்டி) விளையாடும் வீரர்களுக்கு போதுமான ஓய்வு தேவையாகும்.

கேப்டனாக இருப்பது எளிதான பணி அல்ல. பயிற்சியில் ஆர்வமுடன் ஈடுபடுவது, ஆட்டம் குறித்து திட்டமிடுவது உள்ளிட்ட விஷயத்திலும் பணிச்சுமை இருக்கிறது. இதனால் அவ்வப்போது ஓய்வு எடுத்துக் கொள்வது எனக்கு சரியாக இருக்கிறது. அடுத்த 2-3 ஆண்டுகளுக்கு மூன்று வடிவிலான போட்டிகளிலும் இதே உத்வேகத்துடன், உற்சாகத்துடனும் விளையாடுவதில் எனக்கு எந்த பிரச்சினையும் இருக்காது. 34 அல்லது 35 வயதை எட்டும் போது, அந்த சமயம் உடல் ஒத்துழைக்காத பட்சத்தில், வேறு விதமாக யோசிக்கலாம்.

இவ்வாறு கோலி கூறினார்.

Advertisements

Leave a Reply